சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டியே கிடையாது.. திருப்பூர் பெண்ணுக்கு தெரியாத விஷயம்.. இதோ விளக்கம்
சென்னை: சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டியே இல்லை.. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி திருப்பூர் பெண்ணுக்கு தெரியாத விஷயத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம்தேதி நடைபெற உள்ளது.. இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடக்கவிருக்கும் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுவதால், தமிழக அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்தாலும், கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் தினசரி சர்ச்சைகள் எழுந்து வருகிறது. பாஜகவிற்கு எதிராக அதிமுக, திமுக இரண்டுமே கடுமையான பிரச்சாரங்களை முன்வைத்து வருகின்றன.. இதற்கு பாஜகவும் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினரிடம் சானிட்டரி நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறி இளம்பெண் சங்கீதா என்பவர் கேள்வி எழுப்பினார்.. மேலும் அதனை அவர் வீடியோவும் எடுத்தார். அவரிடம் பாஜகவினர் சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அப்பெண்ணை அங்கிருந்த ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகியான சின்னசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண் சங்கீதா கூறியது போல் சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி இல்லை.. முதலில் ஜிஎஸ்டி குறித்த புரிதலே தவறாக உள்ளது. ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் வரி.. ஜிஎஸ்டியில் ஒரு பாதி நேரடியாக மாநில அரசுகளுக்கு கிடைக்கும்.. இன்னொரு பாதி மத்திய அரசுக்கு செல்லும்.. அந்த வரிப்பணமும் வெவ்வேறு பணிகளுக்காக மத்திய அரசால் திரும்பி தரப்படும்..
அப்படி திரும்ப தரப்படும் நிதியின் அளவு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் தொகையை பொறுத்து வேறுபடும்.. மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு நிதி பகிர்வு குறைவாகவும், மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு வரி அதிகமாகவும் பகிரப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த விதிப்படி இந்த நிதி பகிர்வு இருக்கிறது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.. குறிப்பாக தென்மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
அடுத்ததாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி இருக்கிறதா என்றால்.. இல்லை என்பதே உண்மை.. சானிட்டரி நாப்கின் விற்பனைக்கு 0% வரிதான்.. அதாவது சானிட்டரி பேட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து அரசு முற்றிலும் விலக்கு அளித்திருக்கிறது.. சானிட்டரி நாப்கின் விற்பனைக்கு ஜிஎஸ்டி 12% ஆக இருந்தது. ஆனால், 2018ம் ஆண்டு ஜூலை 21 முதல், சானிட்டரி நாப்கின்கள் விற்பனைக்கு முற்றிலும் விலக்கு அளித்தது மத்திய அரசு. சானிட்டரி நாப்கினுக்கான ஜிஎஸ்டி விலக்கு முழுவதும் பொதுமக்களுக்கு போக வேண்டும் என்று உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்து குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரத் திட்டம் (Menstrual Hygiene Scheme) போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் இலவச சானிட்டரி நாப்கின்களும் கூட வழங்கப்படுகிறது.. இந்த சானிட்டரி நாப்கின்கள் மிகவும் மலிவான, மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுவாக சராசரி சைஸ் மற்றும் xl சைஸ்களிலும் இந்த நாப்கின்கள் கிடைக்கும். ஒரு நாப்கினின் விலை வெறும் 1 ரூபாய் ஆகும். ஒரு பாக்கெட்டில் 10 நாப்கின்கள் இருக்கும். அதன் விலை 10 ரூபாய் ஆகும். xl சைஸ் சானிட்டரி நாப்கின்களின் விலை ஒரு பாக்கெட் 15 ரூபாய் ஆகும். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications