ரூ 67 கோடி மோசடிக்கு மூளையாக இருந்தவர்களே இந்த 4 பேருதான்! செந்தில் பாலாஜிக்கு எதிராக கேட் போட்ட ED!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டது அல்ல என்றும் அனைத்துமே உண்மையானவை என்றும் அமலாக்கத் துறை தனது வாதத்தில் முன் வைத்தது.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

சுமார் 8 மாதங்களாக இவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருந்தால் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என அமலாக்க துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
ஜாமீன் மனு: இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட போது அவர் அமைச்சராக இருப்பதால் அவர் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற வாதமும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது.
21 ஆவது முறை நீட்டிப்பு: அப்போது அவர் காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அதாவது செந்தில் பாலாஜியின நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: இதனிடையே இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு புழல் சிறையில் இருந்தவாறே காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை 22 ஆவது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் மனு மீது விசாரணை: இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அமலாக்க துறை வாதத்துக்கு பதிலளித்து செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர் என வாதிட்டார்.
30 வழக்குகள்: செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்க துறை தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், போராட்டங்கள் நடத்தியதற்காக, அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷமிட்டது, கொரோனா விதிகளை மீறியதாக அரசியல் காரணமாக தொடரப்பட்ட வழக்குகள் அவை.
அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷம்: இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான் என்பதால், 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்க துறை முன் வைத்த வாதம் தவறு.
செந்தில் பாலாஜியுடன் குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் அவருடைய தனிப்பட்ட உதவியாளரே இல்லை. இதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா. செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் அமலாக்கத் துறையிடம் இல்லை. ஆனால் ஒரு பென் டிரைவில் அரசு அலுவலகத்தில் இருந்து சேகரிப்பட்ட ஆவணங்களை மட்டுமே அளித்துள்ளார்கள். இதை எப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும்?
67 கோடி ரூபாய்: மேலும், கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிட்டார். வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்க துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர், புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்க துறையினரே கூறுகின்றனர்.
அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் என குறிப்பிட்டார்.
ஆதாரம் எல்லாம் சும்மா இல்ல: அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 2,700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள்.
செந்தில் பாலாஜி, வேலைவாய்ப்புகளுக்கு பணம் வாங்கினார் என்பதற்கும் தொடர் குற்றங்களை அவர் செய்தார் என்பதற்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. அது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார், அவருடைய இரு தனிப்பட்ட உதவியாளர்கள் ஆகிய 4 பேரும் இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டவர்கள்.
இத்தனை நாட்கள் சிறையில் இருந்தார் என்ற காரணத்தை எல்லாம் வைத்து ஒருவருக்கு ஜாமீன் கேட்க முடியாது. நாங்கள் சேகரித்து வைத்துள்ள ஆதாரங்கள் பேசும். இவ்வாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications