காசு எல்லாம் வேஸ்டு.. இடியே விழுந்தாலும்.. பங்கில் பெட்ரோல் போடும் போது இதுல ரொம்ப கவனமா இருங்க
சென்னை: பெட்ரோல், டீசல் பங்குகளில் நீங்கள் எரிபொருள் நிரப்பும் போது முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்க வேண்டும்.
கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனாலும் கடந்த வருடம் வேகமாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. தேர்தல் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
இந்தியா முழுக்க கிட்டத்தட்ட இதே அளவில்தான் வெவ்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசல் விற்கப்பட்டு வருகிறது.
மோசடி: இந்த நிலையில் பெட்ரோல், டீசல் பங்குகளில் நீங்கள் எரிபொருள் நிரப்பும் போது முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்க வேண்டும் என்ற அறிவுரையை வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக நாம் பெட்ரோல் போடும் முன் எவ்வளவுக்கு பெட்ரோல் போட வேண்டும் என்று சொல்லுவோம். உதாரணமாக 150 ரூபாய்க்கு போட சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஜீரோ சரியாக இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.
அதை நாம் பார்ப்போம். முழுதாக போடப்பட்டதும் நாம் பணம் கொடுத்துவிட்டு வருவோம். இதுதான் வழக்கம். இதில்தான் தற்போது புதிய வகையான மோசடி நடக்க தொடங்கி உள்ளது.

அதன்படி 150 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்கிறோம் என்றால்.. ஜீரோவை நோட் செய்ய சொல்வார்கள். ஜீரோவை நோட் செய்ததும் 50 ரூபாய்க்கு மட்டும் போடும் மோசடி நடக்கிறது. அதன்பின் நாம் கவனித்ததும். 150 ரூபாய் என்று மாற்றி சொல்லுவோம்.
அவர்கள் அதை கேட்டுவிட்டு.. தவறுதலாக போட்டது போல.. ஏற்கனவே 50 ரூபாய்க்கு போட்டுவிட்டதால், இந்த முறை மீதம் உள்ள 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் மோசடி நடக்கிறது. பலரும் முதலில் 50க்கு போட்டார்கள், பின்னர் 100க்கு போட்டார்கள். மொத்தம் 150 ரூபாய் என்று நினைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
ஆனால் இது பகல் கொள்ளை மோசடி ஆகும். முதலில் 50க்கு போட்டுவிட்டு.. அதை ஜீரோவாக மாற்றாமல் அதில் இருந்து இன்னொரு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஏமாற்றுவார்கள். மொத்தமாக 100 ரூபாய்க்கு போட்டுவிட்டு 150 ரூபாய் என்று நம்மிடம் காட்டுவார்கள்.
இது பல தனியார் ஒப்பந்த பெட்ரோல் நிறுவனங்களில் நடக்க தொடங்கி உள்ளது. அங்கே உள்ள ஊழியர்கள் தங்களுக்கு என்று பயன்படுத்த இந்த மோசடி முறையை கையில் எடுத்துள்ளனர். இது போன்ற மோசடிகளில் நீங்கள் சிக்க வேண்டாம் மக்களே!












Click it and Unblock the Notifications