"டோஸ்" விட்ட நாடுகள்.. பதறிய இந்தியா.. "அம்பலமாகிய பாஜக தந்திரம்".. திருமாவளவன் போட்ட போடு
: பாஜக நிர்வாகிகள் 2 பேரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய விசிக கோருகிறது
சென்னை: உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி, மதரீதியாகப் பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விசிகவின் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில், டிவி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அரபு நாடுகள் அதிர்ந்து போயுள்ளன.. இதைத்தொடர்ந்து கதார், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன..

நுபுர் ஷர்மா
நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியன. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. அத்துடன், அந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை அழைத்து நேரடியாகவும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சவுதி அரேபியா
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த 3 நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன... இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுகளுக்கு இந்தியா பதிலளித்தது.. விளக்கமும் தந்தது.. எனினும், அரபு நாடுகளின் எதிர்ப்பு அதிகமானதையடுத்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக நடவடிக்கை எடுத்தது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பில் இருந்து நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர். மேலும் அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவளவன்
இப்படிப்பட்ட சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபி அவர்களை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது.

நாயகர்
இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா என்பவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசினார். இன்னொரு நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபி பெருமானை இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இதனால் அரபு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.

விருந்து கேன்சல்
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களை புறக்கணிப்போம் என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடைகளிலிருந்து இந்தியப் பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. குவைத், கத்தார், ஈரான், ஆகிய நாடுகள் இந்திய தூதரை நேரில் அழைத்துத் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அவப்பெயர்
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும், உலக அரங்கில் சகிப்புத்தன்மை அற்ற நாடு என்ற அவப்பெயரும், தலைக்குனிவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அவர்களுடைய வேலைக்கெல்லாம் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் பாஜக நிர்வாகிகளின் வெறுப்புப் பேச்சே காரணம்.

பாஜக தலைவர்
அரபு நாடுகளில் எழுந்த எதிர்ப்பையொட்டி அவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைப்பதாக பாஜக அறிவிப்பு செய்து இருக்கிறது. ஆனால் நூபுர் சர்மாவோ பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர்கள் எல்லோரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகச் சொன்னது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகச் செய்த தந்திரம்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
Recommended Video

பாஜக
இது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பையோ, தலைகுனிவையோ நீக்குவதாக இல்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி, மதரீதியாகப் பதற்றத்தை உருவாக்கி மிகப் பெரிய வன்முறை கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இசுலாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வெறுப்பைப் பரப்பிவரும் சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்"என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications