'சங்கி' என்றால் இதுதான் அர்த்தம்.. அவர்கள் மாற்ற முயற்சிக்கிறார்கள்.. ஆனால் எடுபடாது - திருமாவளவன்
சென்னை: சமீபத்தில் சங்கி எனும் வார்த்தை குறித்து ஏராளமான விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சங்கி என்றால் 'இவர்கள்தான்' என விளக்கத்தை திருமாவளவன் கொடுத்திருக்கிறார்.
ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா பேசியிருந்தது பெரும் விவாதங்களை உருவாக்கியிருந்தது. அதாவது,

"எங்கள் படக்குழுவினர், சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளை அவ்வப்போது காட்டினார்கள், அதில் என் காதில், அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. சங்கி வார்த்தை முதலில் எனக்கு தெரியாது. அதை பற்றி தெரிந்து வேதனைப்பட்டேன். ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமைப்படுகிறேன். ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்கும் இல்லை" என்று பேசியிருந்தார்.
இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதம் வெடித்தது. இந்நிலையில், வழக்கம்போல இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி விளக்கமளித்திருக்கிறார். அதில், "சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட ஐஸ்வர்யா பேசவில்லை. ஆன்மீகவாதியான தனது தந்தையை சங்கி என குறிப்பிடக்கூடாது என ஐஸ்வர்யா பேசினார்" என்று தனது பாணியில் கூறியிருந்தார்.
நேற்று சங்கி விவகாரத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், "இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமரசம் செய்துக்கொள்ளாத, இந்திய நாட்டின் குடிமக்கள் யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம்" என்று கூறியிருந்தார். தொடர்ச்சியாக சங்கி எனும் வார்த்தை குறித்து விளக்கங்கள் வந்திருந்த நிலையில், திருமாவளவன் இதற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதாவது, "எல்லாவற்றையும் திரிப்பதுதான், திரித்துப் பேசுவதுதான் பாரதிய ஜனதா, சங்பரிவாரின் அரசியல். சங்கி என்பது ஏதோ பெருமை என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு அந்த வார்த்தை உறுத்தலாகதான் இருக்கிறது, வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் அதை பெருமையாக எடுத்துக் கொள்கிறோம் என அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் சனாதன சக்திகள், சமூக நீதிக்கு எதிரான சக்திகள், பாகுபாடுகளை உயர்த்திப் பிடிக்கிற சக்திகள், மத வெறியை தூண்டுகிற சக்திகள், வெறுப்பு அரசியலை விதைக்கிற சக்திகள், கோயில், கடவுள் என்ற பெயரால் மக்களை மயக்குகிற சக்திகள்தான் 'சங்கிகள்' என்று அறியப்பட்டிருக்கிறார்கள். அதை அவர்கள் அப்படியே திரிகிறார்கள். திரித்து வேறு பொருளை கொடுக்க முயற்சிக்கிறார்கள் அது எடுபடாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications