அதிமுக அந்த ஒரு வார்த்தை சொல்லட்டும்.. இனி பேசவே மாட்டேன்.. செல்லூர் ராஜுவுக்கு திருமாவளவன் பதிலடி
சென்னை: அதிமுக திராவிட இயக்கம் அல்ல என்று அறிவித்துவிட்டால், இனி அந்தக் கட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக சமூக நீதி இயக்கம் என்ற மரியாதை உள்ளதாக கூறிய திருமாவளவன், ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வளர்வதற்கு அதிமுக வாய்ப்பளித்தால், அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் அதிமுகவை ஆர்எஸ்எஸ் இயக்கம் வழிநடத்துவதில் என்ன தவறு என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதா என்று அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என்று பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் எல்.முருகன் கருத்து மற்றும் செல்லூர் ராஜூ எதிர்வினை குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு திருமாவளவன், எல்.முருகன் ஆர்எஸ்எஸ் பாசறையில் வளர்ந்தவர். அப்படி பேசுவதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக பெரியார் பாசறையில் வளர்ந்த இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் வளர்வதற்கு இடம்தரவில்லை என்று கருத்து இங்கு வலுவாக உள்ளது.
ஆனால் அவர்களை பின்பற்ற கூடிய எடப்பாடி பழனிசாமி ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த துணிச்சலில் தான் அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்தினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பும் நிலையும் உருவாகி இருக்கிறது. இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபமாகி இருப்பதை உணர்த்தக் கூடியதாக உள்ளது.
விஜய்க்கும் வேண்டுகோள் விடுத்துருக்கிறார்கள் என்றால், அவரின் பேச்சிலும் செயலிலும் அந்த சாயல் இருப்பதாக நம்புகின்றனர் என்பதை உணர வேண்டிய உண்மையாக உள்ளது. அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன். ஆர்எஸ்எஸ் இங்கு வளர்வதற்கு அதிமுக அல்லது இதர கட்சிகள் வாய்ப்பு அளித்தால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாக அமைந்துவிடும். அதனை விசிக சார்பாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தொடர்ந்து, செல்லூர் ராஜூ சொல்வதை போல் திசைமாறி சமூக நீதியின் பக்கம் போய்விட்டேனா.. அதிமுக மீது மரியாதை உள்ளது. அதிமுகவை சமூகநீதியின் இயக்கம், பெரியார் இயக்கம், அண்ணா இயக்கம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கருத்துக்களை முன் வைக்கிறோம். பாஜகவுடன் நட்பாக இருப்பவர்களை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதிமுக திராவிட இயக்கம் அல்ல என்று அறிவித்தால், இனி நானும் பேச மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications