அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா? அழுத்தம் கொடுக்கும் திருமாவளவன்!
சென்னை: சாதி பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன். இவர்கள் தங்கள் தந்தை வாங்கிய 6 ½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுடைய நிலத்திற்கு அருகில்ல் இருக்கும் சேலம் இரும்பாலை பகுதியிலிருந்து குடியேறிய குணசேகரன் என்ற நபர் அவர்களுடைய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றுள்ளார். ஆனால், கண்ணையனும், கிருஷ்ணனும் அந்த நிலத்தை விற்க முன்வரவில்லை.

குணசேகரன் என்பவர் பாஜக சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது கிரிமினல் பின்னணியை பயன்படுத்தி, கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோரின் நிலத்தை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்பதற்காக ஒரு லட்சத்தை குணசேகரனிடம் கண்ணையனும், கிருஷ்ணனும் பெற்றதாக ஒரு போலி பத்திரத்தைத் தயார் செய்து, தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையில் இருந்து கிருஷ்ணனுக்கு சம்மன் வந்துள்ளது. அமலாக்கத் துறையின் அந்தக் கடிதத்தில் 'இந்து – பள்ளர்’ என்று சாதியின் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் வழக்கறிஞர் உதவியுடன் சென்னை சென்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அப்போது மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது வழக்கறிஞர் பிரவீணா மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாஜக நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை செயல்பட்டது. விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, சாதி பெயரை குறிப்பிட்டது என கண்டனங்கள் குவிகின்றன. கடிதத்தில் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக நிர்வாகியை கைது பண்ணுங்க.. தயவு தாட்சண்யமே கூடாது.. வெடித்தெழுந்த கிருஷ்ணசாமி! ED-க்கும் சூடு!
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள இராமநாய்க்கன் பாளையத்தைச் சார்ந்த கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய இருவருக்கும் சென்னை அமலாக்கத்துறையினர் 'சம்மன்' அனுப்பியுள்ளனர். அதற்கான அஞ்சல் உறையில் 'இந்து - பள்ளர்' என சாதிப் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இது, இதுவரை இல்லாத, அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு புதிய நடைமுறையாக உள்ளது. அமலாக்கத்துறையின் இந்த இழிவான போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்குச் சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தைப் பறிப்பதற்கு முயற்சித்து வருகிற குணசேகரன் என்கிற பாஜக மாவட்ட பொறுப்பாளரின் தூண்டுதலில் இது நடந்திருப்பதாகத் தெரிய வருகிறது. ஏழை சிறு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையினரையும், பாஜக பொறுப்பாளரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்திட வேண்டுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications