2014ல் நடந்தது என்ன? 15 மீட்டரால் வந்த பிரச்சனை.. உச்ச நீதிமன்றத்தில் பாயிண்டை பிடித்த தமிழக அரசு
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ள மனுவில் கூறியிருப்பது என்னென்ன? என்று இங்கே பார்க்கலாம்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 2014ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நாங்கள் நடந்துகொள்கிறோம். எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது . பாரம்பரியத்தின்படி நேற்று மலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு 2014ல் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக யாரும் தடை வாங்கவில்லை; மேல்முறையீடும் செய்யவில்லை. அப்படி இருக்கையில் இப்போது எப்படி தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த முடியும்?
2014ல் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பின்படி நாங்கள் நடக்கிறோம். எப்போதும் போல, அங்கு தீபம் ஏற்றப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று குறிப்பிட்டார்.
மனுவில் இருப்பது என்ன?
இந்த நிலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை;100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது. 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதைக் கூறியுள்ளது; அதன்படியே அரசு செயல்படுகிறது
புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிப்பது இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது, என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் கேவியட்
அதே சமயம் திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்னொரு மனு விசாரணை
இன்னொரு பக்கம் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய உத்தரவு தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். இந்நிலையில், இம்முறை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் அதற்கு இரண்டு முறை உத்தரவிட்டும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய உத்தரவு தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications