திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவரின் பெயர், ஊர் விவரம் வெளியீடு!
சென்னை: திருவள்ளூரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நபரின் அடையாளம் தெரிந்தது. அவர் டெல்லியை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்பதும் அவருக்கு 28 வயதாகிறது என்பதும் தெரியவந்தது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரையே பின்தொடர்ந்து வந்த வடமாநில இளைஞர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிய நிலையில், சிறுமியோ பள்ளிச் சீருடையில் ரத்தம், முகத்தில் காயங்களுடன் அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது குழந்தை அழுது கொண்டே வந்ததை கண்ட குழந்தையின் தாய், சிறுமியிடம் விசாரித்த போதுதான் வடமாநில இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரியவந்தது.
14 நாட்களாக அந்த கொடூரனை தேடி வந்த நிலையிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனினும் அவருடைய புகைப்படம், வீடியோவை போலீஸார் வெளியிட்டு தேடி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதாவது சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட தொலைவில் இருந்த செல்போன் எண்களைத்தான் போலீஸார் ஆய்வு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த நபர் வேறு மாநிலத்திற்கு ரயிலில் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.
சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து அந்த கொடூரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த நபரின் புகைப்படத்துடன் இந்த நபரை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்ற வரிகளை 4 மொழிகளில் பதிவிட்டு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்தது அவர்தான் என தெரியவந்தது.
இந்த நிலையில் அவரை போலீஸார், கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலத்தில் ஒரு தாபாவில் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர் தாபாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மீண்டும் கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லப்பட்ட அவர், குறித்த விவரங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அதாவது அவர் டெல்லியைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்பதும் அவருக்கு 28 வயதாகிறது என்பதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications