இந்த ஆண்டு 5000 கோவில்களில் திருப்பணி.. இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நடைமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையால் பக்தர்கள் மனநிறைவு அடைந்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று 34 ஜோடிகளுக்கான திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது என்ற நோக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் 8 பெண்கள் உட்பட பட்டியலின மற்றும் பழங்குடியினர் அர்ச்சகர்கள் ஆகியுள்ளனர். முறையாக பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும் வழங்கியுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் அனைவரும் கோலோச்ச வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அறம் சார்ந்த தொண்டுகள் செய்வதால்தான் இந்துசமய அறநிலையத் துறை என பெயர் பெற்றது.
ஏராளமான கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்ட பணிகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் பல்வேறு கோயில்களில் திருப்பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 5000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலம் இந்த திமுக ஆட்சிதான்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications