4 ஆயிரம் கோடி செலவு கணக்கு இதுதான்! வடிகால் பணிகள் பற்றிய புகாருக்கு பரந்தாமன் விளக்கம்
சென்னை: மழைநீர் வடிகால் பணிகளிலும் உதயநிதியை மட்டுமே திமுகவினர் முன்வைத்து வருகின்றன என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அதற்கு உரிய பதிலை சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முன்னெச்சரிக்கை கொடுக்காததால் மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி அதிக சேதங்களைச் சந்தித்தார்கள். அதை உணர்ந்து இந்த ஆண்டு உரிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால், மழை சென்னை மக்களை விட்டுவிட்டு வேறு திசையில் வெளியேறிப் போய்விட்டது.

இந்த ஆண்டு வெள்ள அபாயத்திற்கு பயந்து வேளச்சேரி, அடையார், டி நகர் போன்ற பகுதிகளில் உள்ள மேம்பாலங்களும் மக்கள் தங்களின் கார்களை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு போய் வரிசையாக பார்க்கிங் செய்ய தொடங்கிவிட்டனர். உடனே காவல்துறை ஒருநாளைக்கு 1000 ரூபாய் என அபராதம் போடத் தொடங்கியது. பின்னர் சமூக ஊடகங்களில் மக்கள் விமர்சனத்தை முன்வைத்ததால் துணை முதல்வர் உதயநிதி, அபராதம் விதிக்கக்கூடாது என ஆணையிட்டார்.
ஆனாலும், இந்த மழையை வைத்து ஆளும் கட்சித் தொண்டர்களும் எதிர்க்கட்சியினரும் சமூக ஊடகங்களில் அடித்துக் கொண்டதைப் பார்த்தால் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கவலை ஏற்பட்டுவிட்டது. அநாகரிகமான வசைச் சொற்களால் சமூக வலைத்தளம் நிரம்பி வழிந்தது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 4 ஆயிரம் கோடி வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டிருந்தார்.
இந்த மழை அரசியலைப் பற்றியும் அடிதடி கலாட்டாக்கள் பற்றியும் எழும்பூர் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், "முதல்நாள் மழை எந்தளவு பெய்யும் என எச்சரித்தார்களே அந்தளவு பெய்தது. இரண்டாம் நாள்தான் எதிர்பார்த்த அளவுக்கு மிகக் கனமழை இல்லை. அதற்காக அரசு சும்மா இல்லை. எந்தளவுக்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதை எடுத்துள்ளது. அதில் சுணக்கம் இல்லை. ஏதோ மழைக் காலம் இந்த இரண்டு நாட்களோடு முடிந்துவிடவில்லை. இன்னும் நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் மழைக்காலம்தான்.
மழை என்று வந்தால் வெள்ளம் வரத்தான் செய்யும். மழை பெய்த கொண்டிருக்கும்போது வெள்ளம் இருந்தால் அதில் தவறில்லை. மழை முடிந்த பிறகும் வெள்ளம் வெளியேறாமல் இருந்தால்தான் பிரச்சினை. முதல் நாள் வெள்ளம் இருந்தது. அடுத்த நாள் வெள்ளம் வடிந்துவிட்டதே? அது எப்படி? வடிகால் வசதி முறையாகச் செய்ததால்தானே வெள்ளம் வடிந்தது? நிர்வாகம் சரியாக இருந்ததால்தானே அந்தப் பணிகள் நடந்தன? அதை மறுக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் 6செமீ பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கிறதே? வடிகால் பணிகள் என்னதான் செய்தார்கள்? என்ற கேள்விக்குப் பதிலளித்த பரந்தாமன், "சென்னையில் 6செமீ தான் மழை பெய்ததா? மூன்று நாட்களாக மழை பெய்து வெள்ளம் வருவதை அவர் பார்க்கவில்லையா? சென்னை அருகே உள்ள சோழவரத்தில் 30செமீ மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்தால் அந்த வெள்ளம் எங்கே போகும்? சென்னை பக்கிங்காம் கால்வாய் வந்துதானே கடலில் கலக்கும்? அது அவருக்குத் தெரியாதா?

போன முறை முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டார்கள். அதை உணர்ந்தே முன்கூட்டியே உரிய எச்சரிக்கை கொடுத்தது. இப்போது என்ன சொல்கிறார்கள், தேவை இல்லாமல் பீதியைக் கிளப்பிவிட்டார்கள் என்கிறார்கள். இயற்கையை யாருமே தீர்மானிக்க முடியாது. எச்சரிக்கையாக இருப்பதில் என்ன தவறு?
ஒருதுணை முதல்வராக உதயநிதி நகரம் முழுக்க சுற்றுப் பணிகளை முடக்கிவிட்டு வருகிறார். உடனே என்ன சொல்கிறார்கள் தெரியுமா? எல்லா இடத்துக்கு அவரே போகவேண்டுமா என்கிறார்கள். ஒரு துணை முதல்வராக அவர் போவதுதானே சரி? வீட்டில் உட்கார்ந்திருந்தால்தானே தவறு. அவருக்கு வழங்கிய பணியை அவர் ஒழுங்காகச் செய்கிறார். உடனே அவரையே ஃபோகஸ் செய்கிறார்கள் என்கிறார்கள்.
அவரை போகஸ் செய்வதில் என்ன பிரச்சினை? அவர்தானே துணை முதல்வர்? எல்லா இடங்களுக்கும் முதல்வரே போக முடியுமா? உதயநிதி தனியாகப் போகவில்லையே? உடன் தொகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் போகிறார்? உதயநிதி வரவில்லை என்றால் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கீழே இருப்பவர்களை வேலை வாங்குகிறார் என்பார்கள். போனால், அவரே போகிறார் என்கிறார்கள். விமர்சனம் செய்பவர்களைக் கேட்கிறேன், அவர் என்னதான் செய்ய வேண்டும்?" என்று பேசியுள்ளார்.
வடிகால் பணிகள் 4 கோடி செலவானது குறித்து எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டுள்ளது குறித்து, "சென்னை மக்களுக்கு வெள்ளை அறிக்கை எல்லாம் தேவையில்லை. அவர்கள்தான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே? கடந்த ஆட்சியில் எப்படி இருந்தது? இப்போது எப்படி முன்னேறி உள்ளது என்பது அவர்கள் அறிவார்கள். 4 கோடிக்கு வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடிக்கு உதயநிதி, 'வெள்ளமே நிற்காமல் சாலைகள் எல்லாம் வெறிச்சோடி இருக்கிறதே? அதான் வெள்ளை அறிக்கை'என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இந்த ஆண்டு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டால் உடனே அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது எனச் சொல்லி உடனே இனி வேலையே இல்லை என மூட்டைக்கட்டிக் கொண்டு அரசு போய்விட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கும். நகரம் வளர வளர வேலைகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதை மக்கள் உணரவேண்டும். 100% மழைநீர் வடிகால் வேலைகள் முடிந்துவிட்டன என்று உலகத்தில் ஒரு நகரம் அறிவிக்கவே முடியாது" என்கிறார்












Click it and Unblock the Notifications