தமிழ்நாடு சட்டசபை தேர்தலில்.. நடந்த விசித்திரமான சம்பவமே இதுதான்.. தலைகீழாக மாறிய அரசியல்!
சென்னை: விசித்திரமான முடிவுகளைத் தந்திருக்கிறது இந்த தேர்தல். தவெக தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தும் அதன் தலைவரான விஜய்யால், முதல்வராக முடியவில்லை. பிற கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே முதல்வராக முடியும்.
108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), கோட்டையை எட்டிப்பிடிக்க இன்னும் 11 படிகள் (விஜய் 1 தொகுதியை ராஜினாமா செய்வார்) ஏற வேண்டிய கட்டாயத்தில் தவிக்கிறது. இது விஜய்க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல் நிலைத்தன்மைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவால்.
அரசியல் சதுரங்கத்தில் 'கிங்' யார்?
தவெக 108, திமுக 73, அதிமுக 53 எனப் பிரிந்து கிடக்கும் இந்தத் தீர்ப்பு, வாக்காளர்கள் யாருக்கும் முழுமையான அதிகாரத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 118 என்ற மந்திர எண்ணைத் தொட முடியாமல் விஜய் தவிப்பதும், தலா 5 மற்றும் 4 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ் மற்றும் பாமக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகள் 'கிங் மேக்கராக' உருவெடுத்திருப்பதும் தற்போதைய கள யதார்த்தம்.
அரசியல் அவலம்
தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது இடத்தை திமுக பிடித்திருந்தாலும், அதன் தலைவர் ஸ்டாலினால் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அமர முடியவில்லை. அவர் தேர்தலில் தோற்றுப் போய்விட்டார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலில் ஜெயித்திருந்தாலும், அவரால் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இப்படி விசித்திரமான முடிவுகளைத் தந்திருக்கிறது இந்த தேர்தல்.

அதேபோல, திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ், பாமக என தமிழக அரசியல் கட்சிகள் எல்லாமே, ஸ்டாலின் ஜெயித்திருக்க வேண்டும் ; அவரை மக்கள் தோற்கடித்திருக்கக் கூடாது ; கொளத்தூர் தொகுதிக்காக எவ்வளவோ திட்டங்களை செய்திருப்பவர்.
கொளத்தூர்: சரிந்த சரித்திரம்
2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து மு.க. ஸ்டாலின் இங்கு தோல்வியையே சந்தித்ததில்லை. 2011-ல் அதிமுகவின் சைதை துரைசாமியை எதிர்த்துப் போட்டியிட்டபோது கடினமான போட்டியில் வெற்றி பெற்றார். பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் முறையே 37,000 மற்றும் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அத்தொகுதியைத் தனது தனிப்பட்ட செல்வாக்கின் அடையாளமாக மாற்றியிருந்தார். ஆனால், இந்த முறை தவெக-வின் எழுச்சி அவரது கோட்டையைத் தகர்த்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்து வந்தது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இறுதியில் வி.எஸ். பாபுவின் வெற்றி உறுதியானபோது, அது திமுகவின் ஒட்டுமொத்த தேர்தல் வியூகத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அறிவாலயத்தில் நிலவும் சோகம்: சோர்ந்த முகத்துடன் ஸ்டாலின்
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வழக்கமான ஆரவாரம் இன்றி அமைதி நிலவுகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் அளவிற்கு இடங்களைப் பிடித்திருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்து இத்தகைய பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது அக்கட்சியினரை நிலைகுலையச் செய்துள்ளது.
இன்னொரு பக்கம் மக்கள் அவரை தண்டித்திருக்ககூடாது என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது. கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தோற்றப்போது கூட இப்படிப்பட்ட ஆதங்கம் வெளிப்பட்டதில்லை. ஆனால், ஸ்டாலினுக்காக அரசியல் மாச்சரியம் இல்லாமல் இந்த ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட மனநிலையையும் இந்த தேர்தல் உருவாக்கியிருக்கிறது. ஆக விசித்திரமாகத்தான் இருக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications