காங்கிரஸ் எனும் தலைவலியை கழட்டி விட திமுகவிற்கு இதுதான் சரியான வாய்ப்பு.. ப்ளூ சட்டை மாறன் பதிவு
சென்னை: திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை 39 தொகுதிகளை கேட்டு நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என திமுக திட்டவட்டமாக கூறிவிட்டதாம். இதனால் தவெக கூட்டணி பக்கம் போக வேண்டும் என்று காங்கிரஸில் ஒரு பிரிவினர் விரும்புவதாக கூறி, செய்தி பரவி வருகிறது. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவில் மக்கள் செல்வாக்கு இல்லாமல்.. திமுகவின் முதுகில் ஏறி.. பல வருடமாக தமிழ்நாட்டில் சவாரி செய்து.. சுயலாபம் மட்டுமே அடைகிறது. காங்கிரஸ் எனும் தலைவலியை கழட்டி விட திமுகவிற்கு இதுதான் சரியான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா இல்லையா என்பது குறித்து பல்வேறு ஊகமான தகல்கள் ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தருவதற்கு திமுக இந்த முறை தயாராக இல்லையாம்.

கூட்டணி கட்சிகள் அதிகமாக உள்ளதால், அவர்களுக்கும் சீட் கொடுக்க வேண்டியதிருப்பதால், சீட்டுகளை வழக்கத்தை விட குறைத்தே தருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 22 சீட் மட்டுமே தருவதற்கு திமுக விரும்புவதாகவும் ஆனால் காங்கிரஸ் 39 சீட்டுகள் கேட்பதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
அத்துடன் காங்கிரஸ் கட்சியினர் அண்மை காலமாக திமுகவை கடுமையாக விமர்சிப்பது மற்றும் விஜய்யை வைத்து கூட்டணி பேரம் பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல் திமுக உடன் கூட்டணி பேரம் படியவில்லை என்றால், தவெக பக்கம் சாய்ந்துவிடலாம் என காங்கிரஸ் நினைப்பதாகவும் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
அப்படி ஒரு பிரபல ஊடகம் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை வைத்து சினிமா விமர்ச்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி இனி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அப்படி வந்தாலும் ஆட்சி நிலைப்பது கடினம்.
மக்கள் செல்வாக்கு இல்லாமல்.. திமுகவின் முதுகில் ஏறி.. பல வருடமாக தமிழ்நாட்டில் சவாரி செய்து.. சுயலாபம் மட்டுமே அடைகிறது. காங்கிரஸ் எனும் தலைவலியை கழட்டி விட திமுகவிற்கு இதுதான் சரியான வாய்ப்பு. இதையும் தவறவிட்டால்.. அது திமுகவின் தலைவிதி" என்று கூறியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணி அமைக்கும் என்றும். திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். மறைமுகமாக பாஜகவுக்கு சில சக்திகள் உதவுகின்றன, அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications