தவெகவில் இணைந்ததாக பொய் தகவல்.. விஜய்யிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தூத்துக்குடி தொழிலதிபர் நோட்டீஸ்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக பொய் தகவல் அளித்ததாக தவெக தலைவர் விஜய்யிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தூத்துக்குடி தொழிலதிபர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கட்சியின் உள்கட்டமைப்பு பலப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தினார். மேலும், கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை விஜய் அறிவித்தார். தவெகவின் முதல் மாநில மாநாடு விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் லட்சக் கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. தென் மாவட்டத்தில் நடந்த இந்த மாநாடு அரசியல் கட்சிகளை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் உற்று நோக்க வைத்தது. மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, பல்வேறு தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜய்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் சந்திக்க இருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பல்வேறு வியூகங்கள் அமைத்து விஜய் செயல்படுத்தி வருகிறார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் இணைந்துள்ளனர். மேலும், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் பலர் புதிதாக தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததாக பொய்யான தகவல் அளித்ததாக தவெக தலைவர் விஜய், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென கேட்டு குரும்பூர் தொழிலதிபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே மாவடிபண்ணையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் பண்ணையார். இவர் விவசாயம், செங்கல் சூளை, கல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மகன் நிவாஸ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அப்போது தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர், தொழிலபதிபர் கண்ணன் பண்ணையாரும், அவரது மகன் நிவாஸும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தொழிலதிபர் கண்ணன் பண்ணையார் தன் பெயரை தவறுதலாக பயன்படுத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறி தவெக தலைவர் விஜய் மற்றும் தவறான செய்தி கொடுத்த மாவட்ட செயலாளர் பிரைட்டருக்கும் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் தான் எந்தக் கட்சியையும் சாராமல் இத்தனை ஆண்டுகள் தொழில் செய்துவரும் நிலையில் தன்னை நம்பி 1000 குடும்பத்தினர் வேலை செய்து வருகின்றனர். நான் தவெகவில் இணைந்ததாக பொய்யான தகவலை செய்தியாக கொடுத்துள்ளனர். அவர்கள் கட்சியின் செல்வாக்கு உயரும் என நினைத்து தவறான செய்தியை கொடுத்துள்ளனர்.
இதனால் என் தொழில் பாதிக்கப்படுவதுடன், நான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே எனது பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக தவெக தலைவர் விஜய், தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டரும் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் விஜய் மற்றும் பிரைட்டர் இருவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் கண்ணன் பண்ணையாரின் உடன்பிறந்த தம்பி விஜயகுமார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர், குழப்பத்தில் கண்ணன் பண்ணையார் அதிமுக நிர்வாகி எனப் பேசி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொழிலதிபர், நஷ்ட ஈடு கேட்டு தவெகவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications