கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை
சென்னை: கூடுவாஞ்சேரி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து மக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. தலைநகர் சென்னையிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களும் குறை கூறி வருகின்றனர்.

நேற்று இரவும் பொன்னேரி, கூடுவாஞ்சேரி, ஈசிஆரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆரணி பகுதியில் சுமார் 1 மணி நேரம் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதியடைந்த மக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தினமும் இப்படி அறிவிக்கப்படாமல் மின்வெட்டு ஏற்படுவதாகவும், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமம் அடைவதாக தெரிவித்தனர். இன்று மட்டும் இன்றி தினந்தோறும் இப்படி தான் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும், பகல் நேரம் மட்டுமில்லாமல் இரவு நேரங்களில் இப்படி மின் வெட்டு ஏற்படுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பகுதியிலும் நேற்று நள்ளிரவில் சுமார் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதியடைந்த மக்கள் கூடுவாஞ்சேரியில் இருக்கக்கூடிய மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"20 நாட்களாக இப்படித்தான் பண்ணுறாங்க.. பகல் நேரம் தான் மின் வெட்டு இருக்கிறது என்றால் இரவு நேரத்திலும் இப்படித்தான் பண்ணுறாங்க.. போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கிறாங்க" என அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர். இதற்கு பிறகு போலீசார் சமாதானம் செய்து வைத்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications