திடீர் சலசலப்பு.. ’சீனியர்’ திருச்சி சிவா எம்.பி. பெயரும் திமுக தேர்தல் குழுவில் ஒருவழியாக சேர்ப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக திமுக அறிவித்திருக்கும் 3 தேர்தல் குழுக்களிலும் அக்கட்சியின் சீனியர் எம்.பி.க்களில் ஒருவரான திருச்சி சிவா பெயர் முதலில் இடம் பெறாதது ஏன் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குழுவில் திருச்சி சிவா பெயரும் சேர்க்கப்பட்ட திருத்த அறிக்கையை திமுக தலைமை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பணிகளில் திமுக முழு வீச்சில் களமிறங்கிவிட்டது. லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழு, பேச்சுவார்த்தை குழு, கட்சி பணிகளை ஒருங்கிணைக்கும் குழு ஆகியவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்தார்.

திமுக குழுக்கள் அறிவிப்பு: திமுகவின் இந்த குழுக்களில் கட்சியின் சீனியர்கள், ஜூனியர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக திமுக குழுக்களில் தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயர் தவறாமல் இடம்பிடிக்கும். துரைமுருகனும் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளில் கடைபிடிக்கும் அணுகுமுறையும் தவறாமல் பேசுபொருளாகும். இந்த முறை துரைமுருகனின் உடல்நலன் கருதி அவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. திமுகவின் இந்த குழுக்களில் டிஆர் பாலு எம்பி, அவரது மகன் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகிய இருவருமே இடம் பெற்றுள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

டெல்லி முகங்கள்: திமுகவைப் பொறுத்தவரையில் டெல்லி முகங்கள் அல்லது நாடாளுமன்ற முகங்கள் என்கிற பட்டியலில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவாதான் சீனியர்கள். இவர்களில் திருச்சி சிவா தவிர மூவருமே ஒவ்வொரு குழுவில் இடம் பெற்றுள்ளனர். திருச்சி சிவாவின் பெயர் முதலில் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.

திருச்சி சிவா பெயர் முதலில் இல்லையே ஏன்?: இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் பேசிய போது, திமுகவின் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுத்து பேசக் கூடியவர் திருச்சி சிவா என்பது நாடறிந்த ஒன்றுதான். நாடாளுமன்றத்தில் திருச்சி சிவாவின் பேச்சும் இதுவரை தடம்புரளாமல்தான் இருந்து வருகிறது. பொதுவாக திமுக தேர்தல் அறிக்கை போன்ற கொள்கை சார்ந்த குழுக்களில் திருச்சி சிவா இடம் பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறை அவரது பெயர் எந்த குழுவிலுமே இல்லை. தேர்தல் அறிக்கையில் கொள்கையை பற்றி தெரியாத சிலருக்கும் கூட வாய்ப்பு கொடுத்திருப்பதை தவிர்த்துவிட்டு திருச்சி சிவாவை சேர்த்திருக்கலாம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திருச்சி சிவா மீது திமுக தலைமைக்கு அப்படி என்ன அதிருப்தியோ என்கிற கேள்வியையும் திமுக சீனியர்களே முன்வைத்திருந்தனர்.
திருச்சி சிவா பெயர் சேர்ப்பு: இதனைத் தொடர்ந்து திமுக தற்போது திருச்சி சிவா பெயரையும் திமுக கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குழுவில் சேர்த்து அறிவித்துள்ளது. இதனால் திடீரென எழுந்த சலசலப்பு அப்படியே அடங்கியும் போய்விட்டது.












Click it and Unblock the Notifications