சுயம்புவாக வளர்ந்த திருப்பூர்.. இப்போ இந்தியாவுக்கு பாடம் கற்று தருகிறது!
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியில் சரிபாதியை ஒரே ஒரு நகரம் மட்டும் தன் தோளில் சுமக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் தலைநகரமான திருப்பூர் தான் அந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 42,500 கோடி ரூபாய் (அதாவது 4.45 பில்லியன் டாலர்) மதிப்பிலான பின்னலாடைகளைத் (Knitwear) திருப்பூர் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 49 சதவீதமாகும்.

எந்தவொரு மிகப்பெரிய அரசு சலுகைகளும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் (SEZ) இல்லாமல், தன்னுடைய சொந்த உழைப்பாலும், தொழில் போட்டித்திறனாலும் மட்டுமே திருப்பூர் இந்த இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது ஒட்டுமொத்த இந்தியத் தொழில் துறையையும் வியக்க வைத்துள்ளது.
1970-களில் தொடங்கிய பயணம்..
இந்தியாவின் மாபெரும் வெற்றி பெற்ற ஏற்றுமதி கதைகளை உற்று நோக்கினால், அவை பெரும்பாலும் அரசாங்கத்தால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உருவானவை அல்ல என்பது புரியும். அந்த வகையில், திருப்பூரின் இந்த அசுர வளர்ச்சியும் எந்தவொரு மெகா அறிவிப்புகளாலோ (Mega Announcements) அல்லது மாஸ்டர் பிளானாலோ உருவானது கிடையாது.
1970-களில் சில சிறிய சாயப்பட்டறைகள் (Dyeing units) மற்றும் பின்னலாடை நிறுவனங்களைக் கொண்ட ஒரு சிறு தொழில் குழுவாகத் தொடங்கிய திருப்பூரின் பயணம், போட்டி மனப்பான்மை மூலம் படிப்படியாக வளர்ச்சியை எட்டியுள்ளது.
காலப்போக்கில் ஏற்பட்ட கடுமையான தொழில் போட்டிகளையும், உலகளாவிய சந்தை நெருக்கடிகளையும் தனது உழைப்பால் எதிர்கொண்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களே தேடி வரும் ஒரு மாபெரும் உற்பத்தி மையமாகத் திருப்பூர் உருவெடுத்துள்ளது.
தனித்து நின்ற திருப்பூர்!
பொதுவாக, ஒரு மிகப்பெரிய தொழில் நகரம் உருவாக வேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசின் பெரிய உதவிகள், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் (PLI Scheme), சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான அடிப்படை உள்கட்டமைப்பு முதலீடுகளின் உதவி தேவைப்படும்.
ஆனால், திருப்பூரின் அசுர வளர்ச்சியில் இவை எதுவுமே முக்கியப் பங்கு வகிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. எந்தவொரு சிறப்புச் சலுகைகளின் உதவி இல்லாமல், உலகளாவிய தரத்திற்கு நிகரான ஆடைகளைத் தடையின்றி வழங்கும் திறனை மட்டுமே மூலதனமாகக் கொண்டு திருப்பூர் செயல்பட்டு வருகிறது.
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு என்ன தேவை
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றும் இந்த மாபெரும் தொழில் நகரத்திற்கு, அதிநவீன சாலை வசதிகள் மற்றும் விரிவான நகர்ப்புற உள்கட்டமைப்புகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
மேலும், ஏற்றுமதியை இன்னும் பலமடங்கு துரிதப்படுத்தத் திருப்பூர் பிராந்தியத்தில் ஒரு பிரத்யேக சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ), சரக்குக் கையாளுகைக்கான மேம்பட்ட ரயில் போக்குவரத்து மற்றும் எளிதான விமானப் போக்குவரத்து இணைப்பு (Rail and Air Connectivity) ஆகியவற்றை அரசுகள் விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது இத்துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications