திருப்புவனம் கஸ்டடி மரணம்: "நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை" - கொந்தளிக்கும் அண்ணாமலை
சிவகங்கை: சிவகங்கை கோயிலில் நகை திருடிய புகாரில் அங்கு பணியாற்றிய தற்காலிக ஊழியரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. எதிர்பாராத விதமாக அவர் கஸ்டடியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வெள்ளிக்கிழமை தினம் அந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிகிதா (வயது 42) தன் அம்மா சிவகாமியுடன் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பத்ரகாளியம்மன் கோயில் சென்றுள்ளார்.
கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அஜித் (வயது 28) என்ற கோயிலின் தற்காலிக காவலாளியிடம், நிகிதா தன் கார் சாவியை கொடுத்து வண்டியை ஓரமாக நிறுத்தவிட்டு, தன் அம்மாவை கோயிலுக்கு அழைத்து செல்ல உதவியும் கேட்டுள்ளார். இதனிடையே நிகிதா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, காரில் வைக்கப்பட்ட பையில் இருந்த தாலி செயின், வளையல், தங்க மோதிரம் உள்ளிட்ட 9.5 சவரன் தங்க நகை திருடு போயிருந்தது.
மிகுந்த அதிர்ச்சியடைந்த நிகிதா கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த திருப்புவனம் காவல்துறையினர், காவலாளி அஜித்தை விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். நகை தொடர்பாக தனக்கு எதுவும் என்று அஜித் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணையின் போது அஜித் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தார். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் அஜித் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications