வட மாநிலத்தவர் விவகாரம்.. போலி வீடியோக்களை பரப்பிய ஜார்கண்ட் இளைஞர் கைது! தட்டி தூக்கிய சைபர் கிரைம்
வட மாநிலத்தவர் விவகாரத்தில் சைபர் க்ரைம் போலீசார் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலியான வீடியோக்களை பரப்பியதாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. கொரோனா சமயத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும் தங்கள் உறவினர்களுடன் இப்போது திரும்புகின்றனர்.
அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்தவொரு பெரிய பிரச்சினை ஏற்படுவதில்லை.. இதுபோல வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் கட்டிட வேலைகளிலே உள்ளனர்.

வட இந்தியர்கள்
இந்த வேலைகளுக்குத் தமிழர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இதன் காரணமாகவே வட மாநில இளைஞர்களை பணியமர்த்துவதாக வணிகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இம்மாத தொடக்கத்தில் சமூ வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான போலியான வீடியோக்கள் பரவின. அதாவது தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர்களைக் குறி வைத்துத் தாக்குவதாகவும் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பினர்.

போலி வீடியோ
தமிழகத்தில் வேலை செய்து வரும் வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பினர், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகப் பொய்யான தகவலைச் சிலர் பரப்பினர். பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் என்பவரே, இந்தி பேசியதற்காக வட இந்தியர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் ட்வீட் செய்திருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

நடவடிக்கை
இது மட்டுமின்றி, வேறு மாநிலங்களை நடந்தவை, பழைய சம்பவங்களும் கூட இதில் பரப்பப்பட்டன. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் பொய்யான போலியான வீடியோக்களை நீக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். பொய்யான தகவல்களைப் பதிவிட்ட பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் கைது செய்யத் தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது
மேலும், நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் குழுவும் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்தனர். அதேபோல போலியான வீடியோக்களை பரப்பியோரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பியதாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரைத் திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் பீகாரை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
வட இந்தியர்களைத் தாக்கியதாகப் போலி வீடியோக்கள் பரவியது மட்டுமின்றி, கடந்த வாரம் ஹோலி கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் ஹோலி ஒரு முக்கியமான பண்டிகையாகும். இதனால் பலரும் அப்போது சொந்த ஊருக்குத் திரும்பினர். அதையும் கூட ஏதோ தாக்குதல்களுக்கு அஞ்சியே வட மாநிலத்தவர் சொந்த ஊருக்குத் திரும்புவது போலும் போலி தகவல்களைப் பரப்பினர். ஆனால், வட மாநிலத்தவர்கள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாகவே தமிழ்நாட்டில் உள்ளதாகப் பல பேட்டிகளில் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்












Click it and Unblock the Notifications