திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரை அடையாளம் காட்டிய 8 வயது சிறுமி!
சென்னை: திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநில நபர் ஒருவரை போலீஸார் கைது செய்த நிலையில் அந்த நபரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டிய போது, அவர்தான் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை சிறுமி உறுதி செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரையே பின்தொடர்ந்து வந்த வடமாநில இளைஞர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிய நிலையில், சிறுமியோ பள்ளிச் சீருடையில் ரத்தம், முகத்தில் காயங்களுடன் அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது குழந்தை அழுது கொண்டே வந்ததை கண்ட குழந்தையின் தாய், சிறுமியிடம் விசாரித்த போதுதான் வடமாநில இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரியவந்தது.
14 நாட்களாக அந்த கொடூரனை தேடி வந்த நிலையிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனினும் அவருடைய புகைப்படம், வீடியோவை போலீஸார் வெளியிட்டு தேடி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதாவது சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட தொலைவில் இருந்த செல்போன் எண்களைத்தான் போலீஸார் ஆய்வு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த நபர் வேறு மாநிலத்திற்கு ரயிலில் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.
சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து அந்த கொடூரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த நபரின் புகைப்படத்துடன் இந்த நபரை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்ற வரிகளை 4 மொழிகளில் பதிவிட்டு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயினும் அந்த நபர் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞரை போலீஸார் பிடித்தனர். அந்த நபரின் புகைப்படத்தை சிறுமியிடம் போலீஸார் காட்டினர். அப்போது அவர்தான் தன்னை பலாத்காரம் செய்தது என உறுதிப்படுத்தினாராம்.
இந்த நிலையில் சிறுமியை மாங்காய் தோப்புக்கு தூக்கிச் சென்ற போது இந்த நபர் யாருக்கோ போன் செய்தாராம். அது போல் இவருக்கும் யாரோ போன் செய்தார்களாம். இதை சிறுமியும் அவருடைய தாயும் உறுதி செய்தனர். இதையடுத்து இவருடைய கூட்டாளியை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நபர் ஆரம்பாக்கத்திற்கு ஏன் வந்தார். சூலூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு ஏன் வந்தார் போன்ற தகவல்களை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications