8 மணி நேர போராட்டம்! திருவள்ளூர் அருகே.. சரக்கு ரயிலில் பற்றிய தீ முழுமையாக அணைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் அருகே பெட்ரோலிய பொருட்களை ஏற்றி சென்ற டேங்கர் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இதில், டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் பெட்ரோலிய பொருட்கள் எரிந்து பெரிய தீ விபத்தை ஏற்படுத்தியது. இந்த தீ 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மணலி ஐஓசியிலிருந்து 50 டேங்கர்களில் டீசல் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்டு மைசூருக்கு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டிருக்கிறது. இந்த ரயில் இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூருக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்தில் சிக்கியிருக்கிறது.

Tiruvallur train Southern Railway

விபத்து காரணமாக ரயில் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பற்றியுள்ளன. பெட்ரோலிய பொருட்கள் என்பதால் தீ உடனடியாக அடுத்தடுத்த டேங்கர்களுக்கு பரவியுள்ளது. ஆனால் நல்வாய்ப்பாக, 27 டேங்கர்களை ரயில்வே அதிகாரிகள், விபத்து ஏற்பட்ட ரயிலிருந்து பிரித்து எடுத்திருக்கின்றனர். இருப்பினும் 23 டேங்கர்களில் தீ வேகமாக பரவியிருக்கிறது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ எதிர்பார்த்ததை விட வேகமாக பரவியிருக்கிறது. எனவே 23 டேங்கர்களை மீட்க முடியவில்லை.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடந்திருக்கின்றன. ஆனால் பெட்ரோல் மூலம் எரியும் தீயை எளிதில் அணைக்க முடியாது. காரணம், அதன் வெப்பநிலை, நீரை உடனடியாக ஆவியாக்கிவிடும் என்பதால், வெறும் தண்ணீரை கொண்டு இதனை அணைக்க முடியாது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் நுரை கலந்த நீரை ஊற்றி இந்த தீயை அணைக்க வேண்டும்.

எனவே தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை போதாததால், உடனடடியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு உதவியாக 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறங்கியிருந்தனர். தீயணைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர், தெற்கு ரயில்வே சென்னை மண்டல மேலாளர், ரயில்வே ஐஜி உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு, தேவையான உதவிகளை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 23 டேங்கர்களில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 23 டேங்கர்களும் எலும்புக்கூடு போல மாறியிருக்கிறது. விபத்து நடத்த இடத்திலிருந்து 200 மீ தொலைவில் தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தற்போது தீ அணைக்கப்பட்ட டேங்கர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றிரவுக்குள் டேங்கர்கள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டு, குறைந்தபட்சம் சென்ட்ரலுக்கு ஒரு வழியிலாவது ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

தீ விபத்து காரணமாக சென்ட்ரல்-பெங்களூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. சில ரயில்கள் சென்ட்ரல் நிலையத்திலிருந்து அரக்கோணத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கோவை, திருவனந்தபுரம் மற்றும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு அரக்கோணத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விபத்துக்கான காரணம் குறித்து அறிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சமீப காலமாக இந்தியன் ரயில்வேயில் விபத்துக்கள் மிக சாதாரணமாக மாறியிருக்கிறது. போதுமான ஊழியர்கள் இல்லாதது, பராமரிப்பு பணியில் ஏற்பட்டிருக்கும் தேக்கம், போதுமான நிதி இல்லாதது போன்றவை இந்த விபத்துக்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+