ஆங்கிலத்தில் தலைப்பு.. அமைதி காத்த சீமான்! Goatக்குப் பல அர்த்தம் சொன்ன நெட்டிசன்ஸ்
சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள 'Goat’ படத் தலைப்பை வைத்துப் பல சுவாரஸ்யமான விசயங்கள் சமூக ஊடகங்களில் நடந்துள்ளது.
விஜய் நடித்த படங்களில் அதிக சர்ச்சையை எழுப்பாத திரைப்படம் 'கோட்'தான். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த 'தலைவா' திரைப்படத்தில் சப் டைட்டில் 'Time to Lead' என்று போடப்பட்ட போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. அதாவது 'வழிநடத்த வேண்டிய நேரம்' வந்தால்தான் அரசியலுக்கு வருவேன் என்று மறைமுகமாக விஜய் குறிப்பிடுவதாக நினைத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா படம் வெளிவரவிடாமல் தடுத்தார் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

அந்தப் படத்தின் விழா சென்னையில் பிரபல ஹோட்டலில் நடந்தபோது விஜய் எதையும் பேசாமல் மவுனமாக வந்துபோனார். ஆனால், தயாரிப்பாளர் பெரிய நெருக்கடியில் சிக்கினார். அதன்பின்னர் 'மெர்சல்', 'சர்கார்' அடுத்தடுத்து சர்ச்சைகள் கொடி கட்டி பறந்தன. இதுவரை விஜய்யின் படங்கள், அதிமுக, பாஜக, திமுக என அனைத்து கட்சியினரின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அவர் இலவசங்களைக் கொச்சைப்படுத்தியபோது அதை திமுகவினர் விமர்சித்தனர். சர்க்கார் படத்தில் மறைமுகமாக வரலட்சுமியின் கதாபாத்திரம் ஜெயலலிதாவை முன்வைத்து எடுக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.
'மெர்சல்' திரைப்படத்தில் இடஒதுக்கீட்டு முறையால் ஒருசாரார் பாதிக்கப்படுகின்றனர். இடஒதுக்கீடு யாரைச் சென்றடைய வேண்டுமோ அது சரியாகப் போய்ச் சேரவில்லை என்ற வசனம் பலரது கோபத்தைக் கிளப்பியது. ஜிஎஸ்டிக்கு எதிரான வசனம் உள்ளது என பாஜக அதற்குக் கண்டனம் தெரிவித்தது. ராகுல் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டினார். விஜய் திடீரென்று ஜோசப் விஜய் என தனது பெயரை லெட்டர் பேடில் அடையாளப்படுத்தி 25.10.2017 அன்று அறிக்கை வெளியிட்டார். அதில் 'மெர்சல்' திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. அதற்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இப்படிப் பல முறை விஜய் படத்தின் தலைப்பு, வசனம், காட்சி என ஆகியவை எதிர்ப்பை சந்தித்துள்ளன.
இந்த முறை 'கோட்' படம் வெளியாகும்வரை அதன் தலைப்பு பற்றி எந்தச் சர்ச்சையும் எழவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் சீமான் கூட, ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆங்கிலத் தலைப்பை வைத்துப் பற்றி சின்ன எதிர்ப்பைக் கூட வெளியிடவில்லை. மாறாக அவர் படத்தை வாழ்த்திச் செய்தி வெளியிட்டார். தமிழர், தமிழ் என்று பேசும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கூட ஆங்கிலத் தலைப்பை வைக்கலாமா? அது தமிழ் மொழிக்கு செய்யும் அநீதி இல்லையா? என்று வாய் திறக்கவே இல்லை.
இந்நிலையில் விசிக எம்பி ரவிக்குமார், அவரது எக்ஸ் தளத்தில் 'கோட்’ படத்தின் தலைப்பு பற்றி, “விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 'காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! 'என்றும் மாறாதது’ என்பதுதானே 'சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றவர் அதற்கு தொல்காப்பியத்தில் வரும் சொல்லதிகாரம் 157 பாடலை சுட்டிக்காட்டி இருந்தார்.
அந்தக் கருத்திற்கு அதிக ஆதரவு ஒன்றும் கிடைக்கவில்லை. வழக்கமாக விஜய் ரசிகர்கள் இந்தப் பதிவை விமர்சித்தனர். Greatest of All Time என்பதற்கு எல்லா காலத்திற்குமான பெரியவன் எனப் பொருள்கொள்ளலாம். அப்படி எல்லா காலத்திற்குப் பெரியவனாக ஒருவர் இருக்க முடியாதா? என்றும் சில கேள்வி எழுப்பியுள்ளனர். காரல்மாக்ஸ், பெரியார், அம்பேத்கர் எல்லாம் இந்தக் காலத்திற்கும் பெரியவராக அல்லது தேவைப்படும் தலைவர்களாக இல்லையா? என்றும் சிலர் பொங்கி எழுந்துள்ளனர்.
விஜய் படத்தின் தலைப்பை வைத்து வேறு சில சுவாரஸ்யங்கள்கூட நடந்துள்ளது. கவிஞர் மகுடேஸ்வரன், 'Greatest of All Time' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'எஞ்ஞான்றும் மாப்பெரிது' தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். அது சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது. ஊடகங்கள் இதை செய்தியாக மாற்றி வெளியிட்டன. ஒரு ஆங்கில சொல்லுக்கு உடனடியாக தமிழ்ச் சொல் கண்டுபிடிப்பது காலத்தின் தேவைதான். அந்த முயற்சியைக் கூட தமிழ், தமிழர் என்று முழங்கி வரும் சீமான் தொண்டர்கள் முன்வரவில்லை என்கிறார்கள் சில இணையவாசிகள்.
இவரைப்போலவே 'புலிநகக் கொன்றை’ நாவலை எழுதிய எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான பி.ஏ.கிருஷ்ணன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் GOAT என்ற ஆங்கில சொல்லுக்கு உயர்தனிச் செம்மல் என்று ஒரு பொழிப்புரை எழுதினார். அந்தச் சொல்லும் அவரது தமிழ் மொழிபெயர்ப்பு அழகாக உள்ளதாகப் பலரும் சுட்டிக்காட்டினார்கள். மகுடேசுவரன் தமிழ்ப்படுத்தியதில் ஒரு எளிமை இல்லை. கூடவே 500 ஆண்டுகள் பழமையாக இருந்தது. அதையே கிருஷ்ணன் தரமாக மொழிபெயர்த்திருந்தார். கோவையைச் சேர்ந்த மொழிபெயர்பாளர் அவைநாயகம் Greatest Of All Time என்ற வார்த்தைக்கு என்றும் பெரிது.. என மொழிபெயர்த்து ஃபேஸ்புக்கில் போட்டு இருந்தார். இதுவே போதும் என்று தான் நினைப்பதாகவும் அது எளிமையாக உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.
இதே ஃபேஸ்புக்கில் சுரேஷ் வெங்கடாத்ரி என்பவர், “Greatest of All time என்பதை ' எஞ்ஞான்றும் மாப்பெரிது 'என்று மொழிபெயர்க்கப்பட்டுச் சிலாகிக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறேன். அதில் இருக்கும் ஒரு பெரிய குறை என்னவென்றால், ஆங்கிலத்தில் உள்ள Greatest என்னும் சொல் மனிதர்,பொருள் இரண்டையும் அதாவது உயர்திணை அஃறிணை இரண்டையுமே குறிப்பதாக இருக்கிறது.
ஆனால் தமிழில் 'மாப்பெரிது' என்று சொல்லி முடிக் கையில் அது மனிதரையல்லாமல் பொருட்களை அதாவது அஃ றினைப் பொருளை மட்டுமே குறிப்பதாக உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த டைட்டில் ஒரே சமயத்தில் படத்தையும் குறிக்கலாம்.அதன் ஹீரோவையும் குறிக்கலாம்.ஹீரோ விஜய்யை குறிப்பது எனும் போது மாப்பெரியவர் அல்லது பெரியவன் என்றுதானே இருக்க முடியும்.பெரிது என்பது பொருந்தவில்லையே. ஆங்கிலத்தில் உள்ள flexibility தமிழில் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றும் விளக்க உரை எழுதி இருந்தார்.
ஒரே தலைப்புதான். ஆனால் வகை வகையான அர்த்தங்களில் மொழிபெயர்க்க முடிந்துள்ளது. இது தமிழின் சிறப்பும்கூட. தமிழ் பேன்ற மொழிகளில்தான் ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. அதனால்தான் இப்படி விதவிதமாக மொழிபெயர்க்க நம்மால் முடிகிறது. எம்பி ரவிக்குமார் தலைப்பை வைத்து சனாதனம் என்று ஒரு திரியைக் கொளுத்தி போட்டார். அதற்கு புஸ்ஸி ஆனந்த், 'படத்தை பொழுதுபோக்காகவே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தட்டிக் கழித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications