உழவர் சந்தையை போல நகர்புறங்களில் 100 உழவர் அங்காடி.. வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
சென்னை: உழவர் சந்தையை போல நகர்புற நுகர்வோர்களை விரைவில் சென்றடைய வசதியாக 100 உழவர் அங்காடிகள் ரூ.5 கோடி மானிய நிதியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் முதல் முதலாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் தனியாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்து வரும் அமைச்சர் பன்னீர் செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், உழவர் சந்தையை போல நகர்புற நுகர்வோர்களை விரைவில் சென்றடைய வசதியாக 100 உழவர் அங்காடிகள் ரூ.5 கோடி மானிய நிதியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியதாவது:- உழவர் சந்தைகளில் விற்பனை செய்வதை போன்று தரமான வேளாண் விலை பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் நகர்புற நுகர்வோர்களை விரைவில் சென்றடைய நிர்ணையிக்கப்பட்ட தர அளவுகளின் படி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து தரம் பிரித்து, சிப்பம் கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள் ரூ.5 கோடி மானிய நிதியில் செயல்படுத்தப்படும். முதல்வர் மண்ணுயிர் காப்போம் திட்டம் 2024- 25 முதல் செயல்படுத்தப்படும். 2024-25 ஆம் ஆண்டிற்கு மொத்தம் 206- கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications