விஷச் சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி!
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் 36 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோருக்கு இன்று சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். மாணிக்கராஜ், இ. ரவிக்குமார், வி. தனராஜ், வ. சின்னசாமி, எ. இராமகிருஷ்ணன், அ. கணேசமூர்த்தி , சு. சிவராமன், வேணுகோபால், ஆ.கு,மீ. அம்பழக இராம வீரப்பன், இரா. இந்திரகுமாரி, எச்.எம். ராஜூ, சி. வேலாயுதன், தா. மலாவன், தா. இராசாம்பாள், மொ.பரமசிவம், இராமநாதன் ஆகியோர் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி விஷச் சாரய சம்பவத்தில் உயிரிழந்த 35 பேர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சியில் ரசாயனம் கலந்த கள்ளசாராயம் விவகராத்தில் உயிரிழப்புகள் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும் கள்ளச்சாரய விவகாரத்தில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் எனவும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. வரும் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டசபை கூட்டத்தைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி சம்பவம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications