ஆர்வக் கோளாறு வேண்டாம்.. வாக்களிப்பதை வீடியோ எடுத்தால் 3 மாசம் ஜெயில்!இனி ஓட்டு போடவே முடியாது!
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், செல்பி அல்லது வீடியோ எடுப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய விதிமீறல்கள் செய்தவர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் வாக்காளர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் மற்றும் 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தேர்தல் 2026
அதே நேரத்தில், 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு நுண்பார்வையாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, சாய்வுத் தளம், நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்போனுக்கு அனுமதியில்லை
வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், நுழைவாயிலில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க தனியாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் (VVPAT) இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் தயார்நிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்காக 300 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 83,875 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 40,427 முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடியோவுக்கு தடை
மேலும் வாக்குச்சாவடி பணிக்காக சுமார் 3.40 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற செயல்கள் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128ன்படி கடும் குற்றமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதம் வரை சிறை
இதனால், செல்போன், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் சாதனங்களையும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குள் டிஜிட்டல் சாதனங்களை கொண்டு சென்று புகைப்படம், செல்பி அல்லது வீடியோ எடுத்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதோடு பயன்படுத்திய மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இனி வாக்களிக்க முடியாது
மேலும், இத்தகைய விதிமீறல்கள் செய்தவர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவின் ரகசியத்தை பாதுகாப்பதே இந்த கடும் நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விரலில் மை வைத்த பிறகு செல்பி எடுக்க விரும்பும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து புகைப்படம் எடுக்கலாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications