ஆளுநர் ரவியை சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டமன்ற கூட்டத்தொடர் இப்போதாவது சர்ச்சையின்றி நடக்குமா?
சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் சென்ற சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை நேரில் சந்தித்து, வரும் 6 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் ஜனவரி 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.

சட்டமன்ற கூட்டத்தொடர் - ஆளுநர் ரவிக்கு அழைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கும், இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு தான் கூடி முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் வாசித்தார். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம். ஆளுநருக்கு உரை நிகழ்த்த தான் அனுமதியே தவிர கருத்து சொல்ல அனுமதி இல்லை என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடந்தது என்ன?
2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது.
ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
சபாநாயகர் அப்பாவு பேச்சால் வெளியேறிய ஆளுநர்
இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். "ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும்.
இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் உள்ளது. அதற்கு கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்" என்று பேசினார்.
சபாநாயகர் இப்படிச் சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையிலிருந்து உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு, அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிலும் சர்ச்சை
அதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதில் இருந்த சில வரிகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தார். சில வரிகளை சேர்த்தும் படித்தார். ஆனால், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசித்தார்.
அதற்குப் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், "தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று தெரிவித்து தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அவையைவிட்டு அவசர அவசரமாக வெளியேறினார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதனால், இந்த முறை சர்ச்சைகள் இன்றி கூட்டத்தொடர் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications