ஆளுநரின் செயல் சட்ட விரோதம்.. ஜனநாயக விரோதம்.. மக்கள் விரோதம்.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் அனுமதி தராமல் இருப்பது சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதம், மக்கள் விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிறப்பு சட்டசபை கூட்டம்: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி, திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.

திருப்பி அனுப்பிய ஆளுநர்: இந்நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு, அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதில், பல்கலைக் கழக வேந்தர்களாக முதல்வரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, சில மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின்: இன்றைய கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், " ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனை கருதி இந்த சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சட்டசபை பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் 'அனுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக' கூறி திருப்பி அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காகவே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்றார்.
அவமதிக்கும் ஆளுநர்: மாநில அரசின் நலனுக்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்களில் எதேனும் விளக்கம் தேவைப்பட்டால் அதனை அரசிடம் கேட்கலாம். இதுவரை அவர் கேட்ட விளக்கங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் கொண்டு திருப்பி அனுப்பியது தமிழ்நாட்டு மக்களையும் அரசையும் அவமதிப்பதாக தான் அர்த்தம்.
ஆளுநர் பதவிக்கு அழகல்ல: 10 சட்ட முன்வடிகள் உள்ளிட்ட 12 சட்ட முன்வடிவுகள் வேறு சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்.சட்டமன்றத்தில் இறையான்மைக்கு எதிரானது ஆகும். ஆளுநர் மத்திய அரசிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கான நிதியை பெற்று தரலாம், தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களை பெற்று தரலாம். ஆனால் தமிழ்நாடு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
முட்டுக்கட்டை: மாநில நலன்கருதி நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி அனுப்பவேண்டியது ஆளுநரின் கடமை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலமான தமிழ்நாட்டில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம். மத்திய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அரசுக்கு இடையூறு: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டு திட்டங்கள் இந்தியாவுக்கு வழிகாட்டும் திட்டங்களாக அமைந்துள்ளன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்குவதை தடுக்க மத்திய அரசின் சில இடையூறுகள் உள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அறிவுரை தேவை: ஆளுநர் விழாக்களுக்கு போகலாம் ஆனால் தினசரி கூட்டம் கூட்டி விதண்டாவாதமான கருத்துக்களை கூறி வருகிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவரது கருத்துக்களுக்கு அமைச்சர்கள் உடனடியாக பதில் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு வளர்வதை காண பொறுக்காததால் தான் என்னமோ இப்படி செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடிதம் எழுதியுள்ளது என்றார்.
ஜனநாயக விரோதம்: தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் அனுமதி தராமல் இருப்பது சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதம், மக்கள் விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications