அண்ணாமலைக்கு பதில் இவரா? வெளியானது அறிவிப்பு..பாஜக தலைவர் தேர்தலுக்கு இன்று விருப்பமனு.. "இடிக்குதே"
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணிக்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அந்த பதவியில் இருந்து மாற்றப்படுகிறார் என்றும், அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேசிய தலைமை தேர்வு செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.. இதனை உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படக்கூடும் என்கிற தகவல் கசிந்தவாறே உள்ளது. இதனிடையே, தமிழகத்தின் புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்..

இதையடுத்து, தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என பல சீனியர்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிகிறது. இதில் நயினாருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாம்.
சக்கரவர்த்தி அதிரடி அறிவிப்பு
இந்நிலையில், மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. மாநில தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக தற்போதைய மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தலைவர் தேர்தல் குறித்து சக்கரவர்த்தி இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "பாஜகவின் அமைப்பு தேர்தல் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கிளைகள் முதல் மாவட்ட தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரை தேர்தல் முடிவடைந்து உள்ளது. புதியவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்காக விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் சமர்ப்பிப்பு
தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை (11.04.2025) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் படிவம் எஃப்-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
மூன்று பருவ காலகட்டத்தில் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவர். மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைகளை சமர்பிக்க வேண்டும்.
வழிமொழிதலுடன் விண்ணப்பம்
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர், படிவம் இ பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் முன் மொழிவுடன் மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிதலுடன் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென்காசி புளியங்குடி ஆனந்தன்
அதாவது, மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் குறைந்தது 10 வருடமாவது அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.. இதை பாஜக நிர்வாகிகள் பலர் எதிர்பார்க்கவே இல்லை.. இதனால், மாநில தலைவர் பதவிக்கு பலரும் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நயினாருக்கு நிறைய சான்ஸ் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், 10 வருடம் கட்சியில் இருந்தால்தான் போட்டியிட முடியும் என்ற விதிமுறை வந்துள்ளது.. ஆனால், நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகளே ஆகின்றன.
அதேபோல, தென்காசி புளியங்குடியை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி என்பவருக்கு அதிக வாய்ப்பு இருக்கலாம் என்றார்கள்.. ஆனால், அதுவும் சந்தேகம்தானாம்.. இவர் தென்காசி மாவட்டம் புளியங்குடி ஊரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் . எனினும் இவருக்கு வாய்ப்பு குறைவு என்பதால், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications