சர்வதேச அளவில் சாதிக்கும் தமிழர்கள்.. காரணம் இரு மொழி கொள்கை தான்! தங்கம் தென்னரசு பெருமிதம்
சென்னை: இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து அதிமுகவினர் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த அமளிக்கு நடுவில் தான் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் மொழி கொள்கை குறித்துப் பேசிய தங்கம் தென்னரசு, இரு மொழிக் கொள்கையால் தான் தமிழர்கள் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட்
பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யத் தொடங்கிய போது, அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, அவை எதுவும் அவை குறிப்பில் ஏறாது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தனித்துவம்
நாடு சுதந்திரம் அடைந்த போது சில மாநிலங்கள் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்தன. வேறு சில மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால், தமிழ்நாடு மட்டுமே வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதில் வெற்றியும் கண்டது.
அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை கொண்டு நாடு இயங்கிய போது, கிராமங்களிலும் பள்ளிகளை அமைத்தது நாம். மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம் எனத் தமிழகம் அறிமுகப்படுத்திய திட்டங்களை பார்த்து இந்தியா மட்டுமின்றி உலகமே வியந்து பாராட்டியது.
இரு மொழிக் கொள்கை
நாட்டிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த சென்னை மாகாணத்தின் வழியில்.. பெண்களுக்குச் சொத்துரிமை அளித்த மாநிலம் நாம்! எந்தவொரு சமரசமும் இல்லாமல் இரு மொழி கொள்கையைத் தமிழகம் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் தமிழ் பண்பாட்டைப் பாதுகாத்தது மட்டுமின்றி.. ஆங்கிலத்தின் துணையோடு உலகை வெல்லும் தணியாத தாகத்தோடு உலகில் வலம் வரத் தொடங்கினர் நமது இளைஞர்கள்.
மக்களுக்கு இடையே உள்ள சமத்துவமின்மையைக் குறைக்கக் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாடு எடுத்த பாதை தனித்துவமானது" என்றார். மேலும், தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications