ஸ்டாலின் சிக்சர்! “விண்வெளி தொழில் கொள்கை”க்கு அமைச்சரவை ஒப்புதல்.. ஸ்பேஸ் எக்ஸுக்கு போட்டி!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, "அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் 10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த கேபினட் கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலை பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிந்து வெளியே வந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சரவை கூட்டத்தில் என்ன நடந்தது என விளக்கம் அளித்தார்.
அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், "திமுக ஆட்சியில் தொழில்துறை, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று புதிய பரிணாமங்களில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 'தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025'-க்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளி தொழில் கொள்கைக்கு கேபினட் ஒப்புதல்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விண்வெளித் துறைக்கு திறமை வாய்ந்த, தகுதியான நபர்களை உருவாக்குவது இந்த விண்வெளி தொழில் கொள்கையின் முக்கிய அம்சம்.
விண்வெளித் துறையில் பெரும்பாலும் நமது கவனம் உற்பத்தி சார்ந்து இருக்கும். ஆனால், இந்த முறை சேவையிலும் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு விண்வெளித் துறையில் இந்தியா மற்றும் உலக அளவில் இருக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் பாய்ச்சலுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடிய வகையில் இந்த கொள்கை உள்ளது.
ஸ்டார்ட் அப்
இதில், ரூ. 25 கோடியில் இருந்து இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு தொகுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 'ஸ்பேஸ் பே' என்று அறிவிக்கப்பட்டு அந்த இடங்களில் முதலீடுகள் வருமேயானால் அதற்கு சிறப்பு தொகுப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஸ்பேஸ் எக்ஸுக்கு போட்டி நிறுவனம்
தமிழ்நாட்டில் ராக்கெட் பிரிண்ட் செய்யப்படுகிறது. உலக அளவில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில், சென்னையில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற நிறுவனங்களை ஊக்குவிக்க இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காப்புரிமை பெறுவதில் 50% சலுகையை அரசு வழங்கும் அம்சமும் இதில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக விண்வெளி என்ற புதிய துறையில் ஒரு பொன்னான நாள் இன்று.
இளம் தலைமுறையினருக்கு விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்களை உருவாக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு மாபெரும் அறிவிப்பாக விளங்கும். உலக அளவில் உள்ள விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள். தென்தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த கொள்கை வரப்பிரசாதமாக அமையும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications