களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. கோவையில் பொற்கொல்லர்களின் வீட்டுக்கே சென்று குறைகளை கேட்டறிந்தார்
சென்னை: அரசின் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவையில் பொற்கொல்லர்களின் வீட்டுக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். இதேபோல் கோவை விளாங்குறிச்சியில், தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இந்த கள ஆய்வுப்பணியை முதல்வர் இன்று கோவையில் இருந்து தொடங்கி வைத்தார்.

இதற்காக கோவைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், இன்றும் நாளையும் என 2 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வந்த முதல்வருக்கு, ஏர்போர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தார். கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பை (IBMS) கொண்டுள்ளது.
என்னென்ன வசதிகள்: இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் ஐந்து மேல் தளங்களில் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திற்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 மின்தூக்கிகள். தீயணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், மழை நீர் சேகரிப்பு வசதிகள், 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்திற்காக 30.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு தொட்டி, ஆறு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இக்கட்டடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், நண்பகல் 12 மணிக்கு கள ஆய்வு பணியின் ஒரு அங்கமாக, முதல்வர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பில் இருந்து நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு போத்தனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.
இதன் பின்னர் கோவையில் தங்க நகைப்பட்டறைக்கு சென்றார். அங்கு நகைப்பட்டறை தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொற்கொல்லர்களின் வீடுகளுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.
இதையடுத்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் கோவை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications