தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு
சென்னை: கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப்பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி. மரியம் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) முனைவர் மஹேஷ்வர் தயாள், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) திருமதி அனிதா ஹுசைன், இ.கா.ப., காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) திருமதி. சி. ராஜேஸ்வரி, இ.கா.ப., காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) திரு. ஆஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) திருமதி. கே. பவானீஸ்வரி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குற்ற சம்பவங்கள் தொடர்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிந்த அறிவிப்பில் கூறுகையில், மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
"முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?" என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது போல், கோவையில் சிறுமிக்கு நிகழ்ந்தது, விழுப்புரம் மரக்காணத்தில் சிறுமிக்கு நிகழ்ந்தது என குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 38 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு சிறுவன் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டுள்ளார் . அதேபோல் அண்மையில் ஒரு ஆணவ கொலையும் நடந்தது. அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதால் , சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இதையடுத்தே இன்றைய மீட்டிங்கில் கடும்தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்வர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications