அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு.. இனி ரேஷனில் இதுவும் தருவாங்களா? அப்ப பாமாயில்.. தமிழக அரசு முடிவு?
சென்னை: ரேஷன் பொருட்களில் கூடுதலாக மற்றொரு பொருளை வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அடுத்தடுத்த கோரிக்கைகள் பறந்தவண்ணம் உள்ளன.. இதையடுத்து தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் எழுந்துள்ளது.
அமைச்சர் சக்கரபாணி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி: அதேபோல, சமீபத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
பாமாயில் : அமைச்சர் சக்கரபாணியின் இந்த அறிவிப்பானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருந்தது.. எனினும், மலிவு விலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் தேங்காய் எண்ணெய், மாநிலம் முழுவதுமுள்ள கடைகளில் விரைவில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகளும் எழுந்தன.. உழவர் உழைப்பாளர் கட்சி இந்த கோரிக்கையை விடுத்திருந்தது..
ஒப்பந்தப்புள்ளி: காரணம், தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும், அக்கட்சி தன்னுடைய காரணத்தை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக தேங்காய் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வெடித்து கிளம்பி உள்ளது.
தென்னை விவசாயம் மேம்பாட்டு குழு சார்பில் தாராபுரத்தில்ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.. மாநில தலைவர் பிரபு ராஜா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தென்னை மரங்கள் வளர்ப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் நடந்துள்ளன..
கொப்பரை தேங்காய்: இறுதியில் அரசு அவர்கள் வைத்துள்ள கோரிக்கையில், "மத்திய அரசு மூலம் வழங்கப்படும் ஆதார விலையை சட்டபூர்வ விலையாக அங்கீகரிக்க வேண்டும். ஆதார விலையை விட குறைவாக விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் வாங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். இது குறித்து புதிய சட்டம் அமைக்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
வலுக்கும் கோரிக்கை: இதனால் மத்திய அரசு தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழ்நாட்டில் தேங்காய் கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே உழவர் உழைப்பாளர் கட்சி விடுத்திருந்த இதே கோரிக்கையைதான், தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழுவும் இப்போது வலியுறுத்த துவங்கி உள்ளது.. எனவே, விரைவில் தேங்காய் எண்ணெய் ரேஷனில் கிடைக்கும் என்றும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யா? அல்லது பாமாயிலுடன் தேங்காய் எண்ணெய்யா? என்பதுதான் இன்னமும் தெரியவில்லை..!












Click it and Unblock the Notifications