நீட்: தமிழக எம்.பிக்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்து வருவது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கண்டனம் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது வரை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருக்கிறது.
இம்மசோதாவுக்கு இன்னமும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக எம்.பிக்கள் குழு
இதனைத் தொடர்ந்து டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு, ஜனாதிபதி மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மனு கொடுத்தனர். இம்மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழக எம்.பிக்கள் குழுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் சந்திக்கவில்லை.

உள்துறை அமைச்சர் அமித்ஷா
பின்னர் தமிழக எம்.பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர். தமிழக எம்.பிக்களுக்கு முதலில் நேரம் ஒதுக்கியிருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பின்னர் அதனை ஒத்திவைத்தார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பங்கேற்றதால் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது. அதற்குப் பின்னரும் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுக்களுக்கு இதுவரை மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை.

நேரம் ஒதுக்காத அமித்ஷா
இது தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார்; இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு

நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்
மேலும் மருத்துவத்துறையில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாக உள்ளது. மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிடுகிறது. எந்த ஒரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும். நீட் விலக்கு மசோதா ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு சட்டசபையின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நாளை மறுநாள் (ஜனவரி8) அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நீட்டுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications