கொளத்தூரில் ஆய்வு... அப்படியே நேராக வீடுகளுக்குள் சென்று.. குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்.. நெகிழ்ச்சி
சென்னை: தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மற்றும் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் டெல்டா பகுதிகள், கொங்கு மண்டல பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்தது.

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை
தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டன. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொளத்தூரில் ஆய்வு
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர், திரு.வி.க. மண்டலத்தைச் சேர்ந்த சபாபதி தெருவில் 23.11.2021 அன்று இரண்டு மாடிக் குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஜெயலட்சுமி, சுதா, மோகனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று, நிதியுதவி வழங்கி, உடல்நலம் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
தொடர்ந்து அவர் வள்ளியம்மை தெருவில் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள், வெள்ளத் தடுப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தேங்கிய மழை நீரை விரைவாக அகற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொடர்பான பிரச்சினையைச் சீர்செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் துரிதமாகச் செயல்படுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைகளை கேட்டறிந்தார்
பின்னர், ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையைப் பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிவாரணப் பொருட்கள்
பின்னர், கொளத்தூர், வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications