ஆட்டத்தில் இறங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.. அனல்பறக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்! வெளியான பிரச்சார தேதி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் சூழலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான இவர் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஈரொடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களமே ஈரோடு கிழக்கு தொகுதியை மையப்படுத்தி சுழன்று கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அக்கட்சி நிறுத்தி இருக்கிறது.

வேட்பாளர்களை அறிவித்த கட்சிகள்
திமுக கூட்டணி கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தது. அதை தொடர்ந்து அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த், தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோரை அந்த கட்சிகள் அறிவித்தன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் தாமதம் காட்டியது.

அதிமுக வேட்பாளர்
இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட நிலையில் ஓபிஎஸ் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனின் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இரட்டை இலையில் போட்டியிடுகிறார் தென்னரசு.

சூறாவளி பிரச்சாரம்
ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தங்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார் டிடிவி தினகரன். மறுபக்கம் திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முக ஸ்டாலின் பிரச்சாரம்
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.












Click it and Unblock the Notifications