சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தனது முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து மறுநாள் தமிழக வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு பட்ஜெட்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புகள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 2 நாட்கள் நடந்தது. இதன்பின்னர் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

கூட்டத்தொடர் முடிந்தது
ஒவ்வொரு துறையையும் கவனித்து வரும் அமைச்சர்கள், தங்கள் துறை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு விளக்கம் அளித்து பேசினார்கள். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டசபை சபாநாயகர் அப்பாவு பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காவல்துறை தொடர்பான மானிய கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

60 அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மட்டும் 60 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதிலும் காவல்துறை தொடர்பான 10 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்கென 3 கோடியே 60 இலட்சம் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பார்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஒரு நாள் ஓய்வு
காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காத்திட ஏதுவாகவும் தனது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் நன்றி
இதேபோல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று முக்கிய தீர்மானமாக நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்ட்டது. தமிழகக்தின் எதிர்க்கட்சியான அதிமுக இந்த மசோதாவை வரவேற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானமும் ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலர்தூவி மரியாதை
இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும், தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் உடன் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications