இந்த நயவஞ்சக வேலை வேண்டாம்.. “தொலைஞ்சு போய்டுவீங்க”.. சீண்டிய டெல்லி.. சீறிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : "குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் வேண்டாம்; தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தயிர் பாக்கெட் மீது 'தஹி' என இந்தியில் அச்சிடக்கோரி மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியது.
இந்நிலையில், இந்தி திணிப்பைக் கைவிடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தொடர் முயற்சி
தமிழ்நாடு இந்தி திணிப்பை என்றும் எதிர்த்து வரும் மாநிலம். இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் இங்கு நடத்தாத போராட்டங்கள் இல்லை. இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும், அதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்ததும் மத்திய அரசு பின்வாங்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஹி
அரசின் பால் கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்கள் மீது 'தயிர்' என்று அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு பதிலாக 'தஹி ' என்ற இந்தி சொல்லை எழுத வேண்டும் என அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது FSSAI. இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாநில மொழிக்கு பதிலாக இந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு திட்டவட்டம்
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்தியில் தஹி என்று அச்சிட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் இந்தியில் தஹி என்று அச்சிட மாட்டோம், தமிழில் தயிர் என்றும், ஆங்கிலத்தில் Curd என்றும் தான் அச்சிடுவோம் என்று தெரிவித்துவிட்டோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொலைந்துவிடுவீர்கள்
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பைக் கைவிடுங்கள்! குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications