டார்கெட் பாஜக: பெங்களூரில் குவியும் எதிர்க்கட்சி தலைவர்கள்.. ஜூலை 17ல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பெங்களூரில் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்காக 17ஆம் தேதி பெங்களூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் பற்றி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேசினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வரும் 17ஆம் தேதி இரவு உணவிற்குப் பின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 18ஆம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வியூகங்களை வகுப்பது, எதிர்க்கட்சிகளின் பொதுவான செயல் திட்டம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற கட்சிகளோடு மதிமுக, கொமதேக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மேலும், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக ஜூலை 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் செல்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications