இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி
சென்னை: சென்னையில் திமுக வலிமையாக இருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிடும் முனைப்பில் அதிமுக இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திமுக வலிமையாக இருக்கும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட விரும்பாத சூழலில், பாஜக, பாமக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளிடம் அந்த தொகுதிகளை ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
2021 சட்டசபைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. அதிமுகவின் அடையாளமாக இருந்த ஜெயக்குமார் கூட தோல்வி அடைந்தார். 2011 சட்டசபைத் தேர்தலை தவிர்த்து சென்னை எப்போதும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்ததே கிடையாது. இதனை மனதில் வைத்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது.

அதாவது சென்னையில் சவால் நிறைந்த தொகுதிகளை பாஜக, பாமக மற்றும் தமாகா பக்கம் தள்ளிவிடும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் கிடைக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு அதிமுக வேட்பாளரின் மனதிலும் இருந்து வருகிறது.
இதனால் சென்னையில் மீண்டும் திமுக வலிமையாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிட அதிமுக விரும்பவில்லை. இதனால் சென்னையில் குறிப்பிட்ட அளவிலான தொகுதிகளை பாமக, தமாகாவிடம் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அன்புமணி மற்றும் ஜிகே வாசன் தரப்பில் சென்னையில் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமியிடமே கூறி இருக்கின்றனர்.
அதிலும் திமுக வலிமையாக இருக்கும் தொகுதிகளை பாமக, தமாகா பக்கம் தள்ளிவிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் என்டிஏ கூட்டணியில் பாஜக மட்டுமே தலைநகரில் போட்டியிட ஆர்வம் காட்டி இருக்கிறது. பாஜக தரப்பில் 4 தொகுதிகளை அதிமுக தலைமையிடம் கோரி இருக்கின்றனர். அதில் பிராமண சமுதாய வாக்காளர்கள் அதிகமுள்ள தி நகர், மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளை கோரி இருக்கிறது.
அதேபோல் ஐடி ஊழியர்கள் அதிகம் வசிக்கும் விருகம்பாக்கம், வடமாநில மக்கள் அதிகமிருக்கும் துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளை கோரி இருப்பதாக தெரிகிறது. இதில் அதிமுக தரப்பில் துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியை கொடுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தி நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய 4 தொகுதிகளில் 2 ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
தி நகர் தொகுதியில் ஏற்கனவே வினோஜ் பி செல்வம் தேர்தல் பணிகளையும் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் வேளச்சேரி தொகுதியில் எஸ்ஜி சூர்யா தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். ஆனால் பாமக தரப்பில் சென்னையில் எந்த தொகுதியிலும் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு பதிலாக கடலூர், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு கோரி இருக்கின்றனர். அதாவது வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பாமக சீட்டுகளை எதிர்பார்க்கிறது. அதேபோல் தமாகா தரப்பிலும் ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications