சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்!
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்த காரணத்தினால் தான், எந்தக் கட்சியுடனும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அந்த அணியில் இருந்த பாமக, ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், ஓபிஎஸ், அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 18ஆக அதிகரித்தது.

இதன்பின் சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்தது. இதன் காரணமாக என்டிஏ கூட்டணி என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 27 முதல் 29 தொகுதிகள் வரை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
ஆனால் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக், ஐஜேகே, ஜான் பாண்டியன் தரப்பு உள்ளிட்ட கட்சிகளையும் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. இதில் ஏற்கனவே புதிய நீதிக் கட்சி, ஃபார்வர்ட் பிளாக், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட்டன.
இதன் மூலமாக சுமார் 50 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்று பாஜக கருதுகிறது. அதேபோல் இந்தக் கட்சிகள் பெறும் வாக்குகள் தாமரை சின்னத்திற்கு கிடைத்த வாக்குகளாக காட்டிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அந்தந்த பகுதியில் பாஜகவை வளர்க்க முடியும் என்று டெல்லி பாஜக தலைமை கருதுகிறது. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்திருக்கிறார். ஏனென்றால் பாமக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் சூழலில், மீதமுள்ள சுமார் 50 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்க வைக்கப்பட்டால், கூட்டணிக்கு பாஜகவே தலைமை என்ற நிலை உருவாகும். அதேபோல் வெற்றி வாய்ப்பும் அதிகமாக இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.
இதன் காரணமாகவே சிறிய கட்சிகளுடன் கூட எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட போடவில்லை. சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி குறியாக இருக்கிறார். அதற்காகவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications