பாஜக எதிர்ப்பில் மென்மை போக்கு.. விஜய் கையாண்ட மோசமான யுக்தி.. காங்கிரஸ் கூட்டணிக்கு வராததன் பின்னணி
சென்னை: தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காததற்கு பாஜக எதிர்ப்பில் விஜய் மென்மையான போக்கை கடைபிடித்ததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக உடனான கூட்டணிக்கு அழுத்தம் கொடுத்த போதும், காங்கிரஸ் தலைமைக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு வரை சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கடந்த 3 மாதங்களாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்று அழுத்தமாக பேசி வந்தது. காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை தீவிரமாக கூறி வந்தனர்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று அழுத்தம் திருத்தமாக டெல்லி காங்கிரஸ்கு தொலைக்காட்சி பேட்டி மூலமாக பதில் அளித்துவிட்டார். ஆனாலும் முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு பிரவீண் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பதில் கருத்து கூறினர். அதேபோல் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் பேசி வந்தனர்.
கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் கூறினர். ஆனால் திமுக தரப்பில் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும்தான் என்று திட்டவட்டமாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி மறைமுகமாக மிரட்டி வந்தது.
கிரிஷ் சோடங்கர் நேரடியாகவே ஒரு அரசியல் கட்சி என்றால், பல்வேறு கட்சிகளிடமும் பேசுவோம் என்று அறிவித்தார். இது திமுக தலைமையை கூடுதலாக கொந்தளிக்க வைத்தது. கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் உடனான பேச்சுவார்த்தை சரிவராத சூழலில், கனிமொழி மூலமாக சோனியா காந்தியை திமுக அணுகியது. மறுபக்கம் காங்கிரஸ் தலைமை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ப.சிதம்பரத்தை அனுப்பி வைத்தது.
இதன்பின் இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் தவெகவினர் ஏமாற்றம் அடைந்தனர். ஏனென்றால் காங்கிரஸ் உடன் கூட்டணி அமையும் என்று விஜய் அதிகமாக நம்பிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சி வந்தால், இன்னும் சில கட்சிகளும் தங்களுடன் வரும் என்று தவெக கணித்திருந்தது.
இந்த நிலையில் தவெக பக்கம் செல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன்படி பாஜக எதிர்ப்பில் விஜய் மென்மையான போக்கை கடைபிடித்ததே காங்கிரஸ் தயங்கியதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் சில தலைவர்கள் அழுத்தம் கொடுத்த போதும் கூட, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications