தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோட்டை முதல் கமிஷனர் அலுவலகம் வரை அதிகாரிகளின் இடமாற்றம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த லிஸ்ட், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, அதற்கு திமுக கொடுத்த 'பதிலடி' என தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது.

எடப்பாடி எதிர்பார்த்தது என்ன? நடந்தது என்ன?
தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் எனக்கூறி, முக்கிய அதிகாரிகளை மாற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மாற்றப்பட வேண்டும் என்பது எடப்பாடியின் முக்கிய கோரிக்கை. அதற்குப் பதிலாக தினகரனை அந்தப் பதவியில் அமர்த்த அவர் பரிந்துரைத்திருந்தார்.
ஆணையம் அருணை மாற்றியது என்னவோ உண்மைதான், ஆனால் அந்த இடத்திற்கு வந்தவர் அபிின் தினேஷ் மோடக். எடப்பாடி கேட்ட நபர் அங்கே வரவில்லை.
தலைமைச் செயலாளர் மாற்றம்
நிர்வாக ரீதியிலான அதிரடி மாற்றமாக, தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, அப்போதைய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ்-க்கு பதிலாக தர்மேந்திர பிரதாப் யாதவை நியமிக்க வேண்டும் என்பது எடப்பாடியின் விருப்பமாக இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக நியமித்து உத்தரவிட்டது.
மேற்கண்ட மாற்றங்கள் எடப்பாடி தரப்புக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளித்தாலும், அடுத்தக்கட்டமாக நடந்த 'லஞ்ச ஒழிப்புத் துறை' விவகாரம்தான் க்ளைமாக்ஸாக அமைந்தது.
சந்தீப் மிட்டல் நியமனம்: கொதித்தெழுந்த திமுக!
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே திமுக தனது அதிரடி எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து கிளம்பிய எதிர்ப்புப் புயல் தேர்தல் ஆணையத்தையே ஒரு நிமிடம் அதிர வைத்தது எனலாம். திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய மிகக் காட்டமான கடிதத்தில், சந்தீப் மிட்டலின் நியமனத்திற்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை ஆதாரங்களுடன் முன்வைத்தார்.
"சந்தீப் மிட்டல் வெளிப்படையாகவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்; அவர் அந்தப் பதவியில் இருந்தால் தேர்தல் நடுநிலைமை என்பது கேள்விக்குறியாகிவிடும்" என்று குறிப்பிட்டிருந்த பாலு, அவர் மீது ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டு தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
வெறும் புகாருடன் நின்றுவிடாமல், " சர்ச்சைக்குரிய இந்த அதிகாரியை உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்; தவறும்பட்சத்தில், தேர்தல் ஆணையத்தின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவை எதிர்த்து நீதிமன்றப் படிகளை ஏறி, உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க திமுக தயங்காது" என்று மிகத் தெளிவான எச்சரிக்கையையும் அந்த கடிதத்தில் பதிவு செய்திருந்தார். இதன் விளைவாகவே, அடுத்த சில மணி நேரங்களிலேயே தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
உடனடி ஆக்ஷன்: மீண்டும் வந்த டேவிட்சன்!
திமுகவின் இந்த 'பவர்ஃபுல்' எதிர்ப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம் உடனடியாக இறங்கி வந்தது. நியமிக்கப்பட்ட ஒரே நாளில் சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டு, மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதமே அதே பதவியில் நீடிப்பார் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னடைவா? வெற்றியவா?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என்கிற எடப்பாடியின் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. ஆனால், அவர் கைக்காட்டிய அதிகாரிகள் யாரும் முக்கியப் பொறுப்புகளுக்கு வரவில்லை. குறிப்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விவகாரத்தில் திமுக கொடுத்த நெருக்கடியால் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றிக் கொண்டது, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பின்னடைவாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
"அதிகாரிகளை மாற்றியது ஓகே... ஆனால் அவர்களின் ஆட்களை மாற்ற முடியவில்லையே" என்பதே இப்போதைய ரத்தத்தின் ரத்தங்களின் மைண்ட் வாய்ஸ்!












Click it and Unblock the Notifications