டீ செலவு மிச்சமா.. டீசல் செலவு மிச்சமா? இது யாரோட காசும் இல்ல.. அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததால் டீ செலவு மிச்சம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அது யாரது தனிப்பட்ட செலவும் இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டின்போது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது மரபு.
தமிழ் புத்தாண்டான இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், ஏழு தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றாத ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிகள் அறிவித்தனர். அதேபோல் கூட்டணியில் அல்லாத பாமகவும் தேநீர் விருந்தை புறக்கணித்தது.

முதலமைச்சர் இல்லாத தேநீர் விருந்து
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு, ஆளூநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் தேநீர் விருந்து நடைபெற்றது.

பொலிவிழந்த தேநீர் விருந்து
இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கலந்துகொண்டன. ஏற்கனவே அறிவித்தபடி தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல் புறக்கணிப்பதாக அறிவித்த கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொள்ளாததால் பொலிவிழந்து காணப்பட்டது. v

அண்ணாமலை கருத்து
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அனைத்தும் மக்களின் வரிப்பணம்தான். மக்களின் வரிப்பணம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் என்பவர் கட்சிகளை கடந்து தமிழ்நாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருந்து வரும் மரபு.

டீசல் செலவு மிச்சம்
அண்ணாமலை இந்த கருத்துக்கு தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷானவாஸ் "பெட்ரோல், டீசல் விற்கும் விலைக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றுவருவதற்கு ஆகும் டீசல் செலவு மிச்சம் என்று எங்களால் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனை தொடர்பான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என்று மலிவுபடுத்திவிடக் கூடாது." என தெரிவித்து இருந்தார்.

நிதியமைச்சர் பிடிஆர் பதிலடி
ஆளூர் ஷாநவாஸின் பதிவை ட்விட்டரில் ரீட்வீட் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநவாஸ். இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications