நகை கடன் தள்ளுபடி ரெடி? முக்கோணம் எடுக்கும் கோல்டு லோன் வாக்குறுதி.. ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்!
சென்னை: "நகையை மீட்போம்... வாக்கைப் அள்ளுவோம்!" - இதுதான் தற்போது தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் தாரக மந்திரமாக மாறியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'நகைக்கடன் தள்ளுபடி' என்னும் துருப்புச்சீட்டை கையில் எடுக்கத் துடிக்கின்றன திமுக, அதிமுக மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK).

அரசு நடத்தும் 'சைலண்ட்' சர்வே!
கடந்த சில நாட்களாக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு ரகசியமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. "யாரெல்லாம் தகுதியான பயனாளிகள்?", "5 சவரனுக்குக் கீழ் கடன் வாங்கியவர்கள் எத்தனை பேர்?" என லிஸ்ட் எடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறதாம். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஒரு 'குட் நியூஸ்' சொல்லி மக்களைத் தன் பக்கம் இழுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் அறிக்கையில் 'சரவெடி' வாக்குறுதிகள்?
அரசியல் கட்சிகளிடையே இப்போது நிலவும் போட்டி, யார் அதிக சவரன் தள்ளுபடி செய்வார்கள் என்பதுதான்.
திமுக: கடந்த முறை 5 சவரன் தள்ளுபடி அறிவித்து சில நிபந்தனைகளால் பலர் விடுபட்டனர். இந்த முறை அந்தப் புகார்களைக் களைந்து, இன்னும் கூடுதல் சலுகைகளுடன் 'மெகா' தள்ளுபடி அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் சேர்க்க ஸ்டாலின் டீம் ரெடியாகி வருகிறது.
அதிமுக: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிபந்தனையின்றி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்" என எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும், என்று அதிமுக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்: அரசியலில் 'என்ட்ரி' கொடுத்துள்ள விஜய், தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே அடித்தட்டு மக்களைக் கவரும் வகையில் 'நகைக்கடன் தள்ளுபடி' குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் எனத் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மக்களின் மைண்ட் வாய்ஸ்!
ஒரு பக்கம் தள்ளுபடி அறிவிப்புகள் மகிழ்ச்சி தந்தாலும், "நிபந்தனைகள் என்ற பெயரில் எங்களைக் கழற்றி விட்டுவிடாதீர்கள்" என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தங்கம் விலை ஒரு பக்கம் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த 'தள்ளுபடி அரசியல்' ஒரு வரப்பிரசாதமா அல்லது தேர்தல் காலத்து மாயையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications