ஆகஸ்ட் 15ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும்.. கலெக்டர்களுக்கு பறந்தது உத்தரவு!
சென்னை: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கிராம சபை கூட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் சர்குலர் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்டோபர் 2), உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மே தினமான கடந்த மே 1 ஆம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து, சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், "வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்ய கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபைக்கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையுள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவு அறிக்கையை படித்து ஒப்புதல் பெற வேண்டும். கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை கிராமசபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications