நீண்ட ஆயுளுடன் வாழனும்.. “தமிழக முதல்வர்” எனக்கூறி ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டை “தமிழகம்” என்று உச்சரிக்க வேண்டும் என்று பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழக முதல்வர்" ஸ்டாலின் என்று குறிப்பிட்டு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளார்கள்.
குறிப்பாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.

ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு தேசிய அரசியல் தலைவர்களுக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் மாஜி முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக முதல்வர்
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று 70 வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு ராஜ்பவன் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆளுநரின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் "தமிழக முதல்வர்" ஸ்டாலின் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆளுநர் ரவி வாழ்த்து
அதில், "70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதாக ராஜ்பவன் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு சர்ச்சை
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை "தமிழகம்" என்று உச்சரிக்க வேண்டும் என்று பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கூடிய தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தமிழ்நாடு என்று இடம்பெற்று இருந்ததை வாசிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications