பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமை செயலகத்தில் நடக்கிறது.. உயர் கல்வித்துறை மீது ஆளுநர் அதிருப்தி
சென்னை: பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன என்று உயர்கல்வித்துறை மீதான தனது அதிருப்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சில மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்து இருப்பதால் இது தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது சமயம் கிடைக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து வருகிறார்.

குறிப்பாக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர்கள் மேற்கொண்ட வெளிநாடு பயணத்தைக் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் உடனடியாக பதிலடி கொடுத்தார். இப்படி பல விஷயங்களில் தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், இன்று உயர்கல்வித்துறையின் செயல்பாடு மீது அதிருப்தி தெரிவித்து ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் கல்வி தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட், செனட், நிர்வாகக் குழு உறுப்பினர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம், நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளையும், அவர்கள் கூறிய யோசனைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.
நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், தமிழக உயர்கல்வித்துறை செயல்பாடு மீது தனது அதிருப்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதாவது:- பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரகள் இல்லாததால் முறையாக இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. பல்கலை. சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் நடப்பது இல்லை. தலைமைச் செயலகத்தில் அந்த துறையின் அறையில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.
பல்கலைக்கழகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாமல் இருக்கின்றனர். இது பல்கலைக்கழக செயல்பாடுகளை பாதிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களின் தேர்வு முறை யுஜிசி விதிக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களில் வழக்கமான பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் இல்லாமல் உள்ளன. அந்த பணியிடங்களுக்கு தற்காலிக பொறுப்பாளர்கள்தான் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அண்மையில் நடந்து முடிந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழக சட்டங்களின்படி பணியிடங்களை தாமதமின்றி நியமிப்பதற்கான செயல்முறையை தொடங்க அறிவுறுத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக தொழில் முனைவோர் பற்றிய நடைமுறை நுண்ணறிவுகளுடன் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை ஈடுபடுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications