நீட் தேர்வுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவு! குடியரசு தின வாழ்த்து செய்தியில் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய உடனடி தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வின் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இருப்பினும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் விலக்கு
இது தொடர்பாக அதிமுக ஆட்சியிலேயே தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து திமுக தலைமையிலான தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

உடனடி தேவை
இந்தச் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.. ரவி வெளியிட்டுள்ள குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய உடனடி தேவை என்று குறிப்பிட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் உள்ள எதிர்மறை வேறுபாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்துள்ளது
தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது, அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு முன்பு 1%க்கு குறைவாகவே அரசுப் பள்ளி மாணவர்களே அரசு மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர் என்றும் 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற மொழிகளை பயில வேண்டும்
மேலும், உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெற உழைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அறியச் செய்கிற அதே நேரத்தில், பிற இந்தியா மொழிகளையும் நாம் பயில வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

முக்கியம்
தமிழ்நாட்டின் சார்பில் அனைத்து கட்சி எம்பிகள் சமீபத்தில் தான் டெல்லி சென்று உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் விலக்கு தொடர்பாக வலியுறுத்தினர். நீட் விலக்கு கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருசேர மத்திய அரசை வலியுறுத்தி வரும் சூழலில், ஆளுநரின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications