அரசு பணியாளர்கள் கோரிக்கை ஏற்பு- ஜன.17-ந் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை
சென்னை: பொங்கல் விழாவுக்கு சொந்த ஊர் சென்றவர்கள், அரசு பணியாளர்கள் பணியிடங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 17-ந் தேதி அரசு விடுமுறை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 17-க்குப் பதிலாக ஜன.29-ந் தேதி பணிநாளாக இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 31-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன் ஜனவரி 14-ந் தேதி முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளால் சில சந்தேகங்கள் பொதுமக்களுக்கு எழுந்தது.
அதாவது ஜனவரி 16-ந் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்கிற கேள்வி எழுந்தது. இதையடுத்து ஜனவரி 17-ந் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 16 முழு லாக்டவுன் என்பதால் பொங்கல் விழாவுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் பணியிடங்களுக்கு எப்படி திரும்புவார்கள்? என்கிற கேள்வியும் எழுந்தது. அத்துடன் ஜனவரி 16 லாக்டவுன், ஜனவரி 18 தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை. இடையில் ஒருநாள் பணிக்காக சொந்த ஊரில் இருந்து பணியிடங்களுக்கு திரும்ப வேண்டும்; ஆகையால் ஜனவரி 17-ந் தேதியையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று ஜனவரி 17-ந் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 17-க்குப் பதிலாக ஜனவரி 29-ந் தேதி அரசு பணிநாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.












Click it and Unblock the Notifications